Translate

FEBRUARY 2025

      கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ. 1:7); என்றபோதிலும், எதிர்காலத்தை ஒரு எதிரியைப் போலவே பார்க்கும் கண்ணோட்டம் இன்றைய நாட்களில் அநேக வாலிபரின் வாழ்க்கையினை வலைக்குள்ளாக வளைத்துவைத்திருக்கிறது என்பதும் அவர்களை பயத்துடனேயே பயணிக்கச் செய்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. பள்ளி, கல்லூரி மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவேனா? வேலை கிடைக்குமா? மற்றும் திருமணம் எப்போது? போன்ற கேள்விகள் ஒருபுறம் வலுவான பழுவாக அழுத்த, வேர்களைப் போல தாங்கி நிற்கும் பெற்றோர்களும் மற்றோர்களும் விடைபெறுவதற்குள் வாழ்க்கையில் வெற்றிகண்டுவிடவேண்டும் என்று விரைந்தோடும் வாலிபரும், அத்துடன், வேர்களற்ற நிலையிலும் தனித்தவர்களாயினும் ஓட்டத்தைக் கைவிடாத வாலிபரும் ஒருபுறமிருக்க, மற்றொரு புறமோ, தங்களைத் தாங்கி நிற்கும் மனிதரைக் குறித்தும் மற்றும் தனித்து விடப்பட்டிருக்கும் வாழ்வினைக் குறித்தும் கரிசனைகொள்ளாது காலத்தைக் கழிக்கும் வாலிபரும் வாழும் உலகம் இது! 

எட்டாக் கனியைப் போல எதிர்காலம் உங்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், 'குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி. 21:31) என்ற வசனத்தின்படி, உங்களுக்கு இருக்கும் பங்கினையும், ஆண்டவருக்கு இருக்கும் பங்கினையும் வாலிபராகிய நீங்கள் முதலாவது மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை வெற்றி பெறுவதும், வாழ்க்கை வெற்றிடமாவதும் ஆண்டவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவினைப் பொறுத்ததே! வாலிபரே! உங்கள் கண்கள் காணும் கோலியத்தைப் போன்ற எதிர்காலத்திற்கு, உங்கள் அடைப்பப் பையிலே இருக்கும் கூழாங்கற்கள் போதுமானவை. ஆற்றில் அவைகளைப் பொறுக்கிச் சேர்த்து, ஆயத்தமானால் போதும் எதிர்காலம் எனும் போருக்கு; 'யுத்தம் கர்த்தருடையது' (1சாமு. 17:47). கூழாங்கல் கவணிலிருந்தால், கூட உங்களோடு கர்த்தரிருந்தால், உங்கள் எதிர்காலத்தின் வெற்றியை எதிர்படுவோரெல்லாம் கொண்டாடும் காலம் வரும் (1சாமு. 18:7).

  இரண்டாவதாக, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்;. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபே. 5:15-17) என்பது பவுலின் ஆலோசனையல்லவோ! என்றபோதிலும், ஆவிக்குரிய கண்களோடு தேவன் ஆயத்தம்பண்ணித் தருபவைகளை, மாம்சீகக் கண்களோடு மறுத்துவிடுவதினால், வாலிபர் பலர் தேவ சித்தத்திலிருந்து விலகி, மாம்சத்தின் சிறைக்குள் தங்களைத் தள்ளிவிடுகின்னறனர். தேவ பார்வையில் அழகானவைகளை, தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்டவைகளை உலக அளவீடுகளால் அப்புறப்படுத்திவிடுகின்றனர். தேவ சித்தத்திற்கடுத்த இலக்கு நிச்சயிக்கப்படாததினாலேயே, அநேக வாலிபருடைய ஓட்டம் வீணாகிப்போயிற்று, பிரயாசமனைத்தும் காற்றோடு காணாமற்போயிற்று. எனவே, நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' (1கொரி. 9:26) என்ற பவுலின் அனுபவ ஆலோசனையின்படி அடிகளை எடுத்துவையுங்கள். 

இறுதியாக, வாலிபரே! 'நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்' (மத். 6:34) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளால் எதிர்காலத்தைச் சந்திக்கச் சத்துவமும், 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது' (சங். 31:15) என்ற தாவீதின் வார்த்தைகளால் உள்ளத்தில் சமாதானமும் உங்களில் உருவாக்கட்டும். 'தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை' (1கொரி. 2:9) என்று வாசிக்கின்றோமே! அப்படியானால், பிதா இருக்க, பிள்ளைகள் நமக்கு பயம் எதற்கு? 'தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்' 'உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்' (சங். 18:28,29) என்ற தாவீதின் வரிகள் உங்களது வாழ்க்கையாகட்டும்!

'பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது' (ஏசா. 55:9) என்று கூறும் அவரது ஆளுகைக்குள் வாலிபத்தை அர்ப்பணித்தால், அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறதை (பிர. 3:11) அனுபவிக்கும் பாக்கியத்தோடு, ஆனந்தமும் பெருகும் உங்கள் வாழ்க்கையிலே! 'பராக்கிரமசாலிகளே கர்த்தர் உங்களோடே இருக்கிறார்' (நியா. 6:12). உங்களுக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்...(யோபு 23:14)

P.J. கிருபாகரன்