இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷயையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். (தானி 1:3,4)
தானியேலும் அவன் உடனிருந்த வாலிபர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, அழகானவர்கள், அறிவிலே சிறந்தவர்கள், எதனையும் எளிதாகக் கற்றுக்கொள்ளும் திறமை படைத்தவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்திலே, நேபுகாத்நேச்சாரின் அரண்மனையிலே உயர்தர ஆகாரமும், கல்வியும் கொடுக்கப்பட்டது. ராஜாவின் கட்டளையின்படி விசேஷித்தவர்களாக அரண்மனையிலே அந்த வாலிபர்கள் நடத்தப்பட்டார்கள், போஷிக்கபட்டார்கள். தானியேலோ அந்த வாலிபர்களுக்குள் வித்தியாசமுள்ளவனாயிருந்தான். மூன்று வருடங்கள் கொடுக்கப்படும் பயிற்சியைப் பெற்று அரண்மனையிலே பதவியை அடையும் எண்ணம் தானியேலை ஈர்க்கவில்லை. தகப்பனும், தாயும், ஊராரும், உறவினரும் மற்றும் நண்பர்களும் பார்க்கக்கூடாத தேசத்தில் இருந்தாலும், கர்த்தருக்காக வித்தியாசமுள்ளவனாக தானியேல் வாழ விரும்பினான்.
தனிமையில் இருக்கும்போது பல வாலிபர்கள் விழுந்துவிடுகின்றனர். தனித்திருக்கும் நேரத்தில் ரகசிய பாவங்களுக்கு உடன்பட்டுவிடுகின்றனர். உள்ளத்திலே பல நாட்களாக மறைந்து கிடக்கின்ற ரகசிய பாவங்கள் அனைத்தும் அரங்கேறுவது தனிமையிலேயே. அறிந்தவர்களும், தெரிந்தவர்களும் அறியக்கூடாத தூரமான இடத்தில் வாழும்போது, வாழ்க்கையில் சிறந்ததோர் இடத்தைப் பெறும்போது, பாவத்திற்குள் தள்ளி சரீரத்தையும் மனதையும் கெடுத்து, அத்துடன் ஆவியையும் அசுசிப்படுத்துவதற்கு ரகசிய பாவத்திற்கு வலிமை உண்டு. நல்ல குடும்பத்திலும், சபையிலும் இருந்தாலும், தேவ பயமற்ற வாலிபர்கள் ரகசிய பாவத்திற்குள் கிடக்கின்றனர்.
வாலிபனான உனக்கு தானியேலின் வாழ்க்கை ஓர் மாதிரி. தானியேல் விரும்பினதைப் புசிக்கலாம், ராஜாவின் உணவையும், ராஜா குடிக்கும் ரசத்தையும் பருகலாம்; அனைத்தும் அவன் கண்களுக்கு முன்னே, கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தானியேல் என்ன செய்தாலும் அவனைக் குற்றப்படுத்த அங்கு யாரும் இல்லை. தானியேல் தனது இஷ்டப்படி வாழ்ந்தால் உடனிருந்த நண்பர்கள் அவனைக் குற்றப்படுத்தும் நிலை உருவாகலாம், ஆனால் மன்னனின் அரண்மனையிலோ தானியேலையும் அவனது போஜனத்தையும் குறித்து குற்றப்படுத்த யாருமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமானவனாகவே வாழ்ந்தான் தானியேல்.
திருடனாய், பொய்யனாய், ஆகாதவனாய், வீம்பு பேசுகிறவனாக தேவனுக்கு விரோதமான காரியங்களுக்குத் தங்களை விற்றுப்போட்டிருந்த பல வாலிபர்களை தேவன் சந்தித்திருக்கின்றார். கூட்டங்களிலோ, முகாம்களிலோ கலந்துகொள்ளும்போது பல வாலிபர்கள் தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். காலையில் எழுந்து ஜெபிப்பதையும், வேதத்தை நிதம் ஆராய்ந்து அறிவதையும் வழக்கமாக்கிக் கொண்ட வாழ்க்கை வாழும் ஒரு வாலிபன், சோதனையான இடத்தில் வைக்கப்பட்டால் அல்லது அவனது செய்கைகளையோ, வார்த்தைகளையோ, மனதின் காரியங்களையோ எவரும் குற்றப்படுத்தாத இடத்தில் வைக்கப்பட்டால் அவனது நிலை என்ன?
தானியேலைச் சுற்றியிருந்த வாலிபர்கள் அனைவரும் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தானியேலுடன் வளர்ந்தவர்களும், வேத வாக்கியங்களை நன்கு அறிந்தவர்களுமாயிருந்தார்கள். யூத குலத்தைச் சேர்ந்த தாய் தனது பிள்ளைக்கு வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். யூத வாலிபர்களுக்கு வாரத்தில் சுமார் 18 மணி நேரம் ஜெப ஆலயத் தலைவன் ஜெப ஆலயத்திலே இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். இப்படி வளர்க்கப்பட்ட யூத வாலிபர்கள் விக்கிரங்களைப் பற்றியும், மதுபானத்தைக் குறித்தும், மற்றவர்களால் உண்டாகும் தீட்டுகளைக் குறித்தும் நன்கு அறிந்தவர்கள், சிறு வயதிலிருந்தே அவைகளைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட தன் உடன் இருக்கும் யூத வாலிபர்கள், பாபிலோன் தேசத்தில் நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் வெறுக்கப்படவேண்டிய அனைத்தையும் சாப்பிடுகிறதை தானியேல் கண்டான். ராஜாவினால் கொடுக்கப்படும் பயிற்சி என்ற எண்ணத்தில் அனைத்தையும் அந்த வாலிபர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளில் தேசத்தில் அதிகாரியாக உயர்த்தபடவிருக்கிறோம் என அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அருவருப்புகளைச் செய்தவர்கள் இஸ்ரவேல் தேசத்திலே அழிக்கப்பட்டுவிட்டார்கள், தேவனுக்குப் பயந்து வாழ்ந்தபடியினாலேயே தேவன் நம்மை பாபிலோன் தேசத்தில் உயர்த்தி, எல்லாவற்றையும் அனுபவிக்கும் நிலையில் வைத்திருக்கிறார் என அந்த வாலிபர்கள் நினைத்தனர். தேவனுக்குப் பயந்து வாழ்ந்த நம்மேல் கர்த்தர் இரக்கம் பாராட்டினதினாலேயே, கைதியாகப் பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தாலும், ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகிறோம் என எண்ணினார்கள்.
ஆண்டவருக்குப் பிரயோஜனமாய் நடந்ததினால் என்ன பிரயோஜனம்? என்ற கேள்வி தானியேலின் முன் வந்தாலும், தானும் மற்ற வாலிபர்களைப் போல அடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டு பாபிலோனிய சேவகர்களால் ஒன்றரை மாதம் நடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்ற நினைவு அவனுக்குள் இருந்தாலும்; பாபிலோன் தேசத்திலும் தன் உடனிருக்கும் வாலிபர்களைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவனாக வாழ தானியேல் தன்னை ஒப்புக்கொடுத்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமாய் வித்தியாசமாக வாழும் வாலிபர்களை தானியேல் தேடியபோது, உடனிருந்த வாலிபர்களுக்குள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபரை அவன் கண்டுகொண்டான். 'இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு" என்ற தமிழ் பழமொழியின்படி ஒரே எண்ணமுடைய அந்த வாலிபர்கள் ஒன்றாக இணைந்துகொண்டனர்.
ஆவிக்குரிய வாலிபன், ஆவிக்குரிய வாலிபனை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். குடிக்கிற வாலிபன், குடிக்கிறவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு அவனுடன் இணைந்துகொள்ளுவான். பாவம் பாவத்தைப் பிடித்து இழுப்பதுபோல, பரிசுத்தம் பரிசுத்தத்தைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் தானியேல். அங்கிருந்த வாலிபர்களில் பிற வாலிபர்கள் பாபிலோன் ராஜாவின் போஜனத்தைச் சாப்பிட தங்களை விட்டுக்கொடுத்தனர்.
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.(தானி 1:8)
அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷர் என்பவனைத் தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். (தானி 1:11-13)
தானியேல் தனி வாலிபனாகவே முதலில் தீர்மானம் செய்தான்; ஆனால், இப்பொழுதோ நான்கு வாலிபர்கள் உள்ள குழு உருவாகிவிட்டது. வாலிபனே நீ உன்னுடைய தீர்மானத்தில் உறுதியாயிருந்தால், உன்னோடு கூட இருப்பவர்களையும் இணைத்துக்கொள்வது எளிதானது.
எல்லா சூழ்நிலைகளிலும், என்ன நடந்தாலும், வேறு இடத்திற்குத் தள்ளப்பட்டாலும், கவனிப்பதற்கு ஒருவரும் இல்லையென்றாலும், எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், விடுதலையோடிருந்தாலும் தேவனுக்கு முன்பாக எடுத்த தீர்மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும், கடைசிவரை அதில் நிலைத்து நிற்கவேண்டும். தானியேல் என்ற ஒரு வாலிபன் என்னைத் தீட்டுப்படுத்த விடமாட்டேன் என்று தனது தீர்மானத்தில் நிலைத்து நின்றதால், மேலும் மூன்று பேர் தீட்டுப்படாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொள்ள தீர்மானித்தனர்.
உடலிலிருந்து ஒரு முடி விழுந்துவிட்டாலும், உயிர் நீத்துவிடும் என கவரிமானைக் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன; அத்தனை உணர்வுடையது, உறுதியானது அது. காட்டுப் புறாவைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா பகுதிகளிலும், ஒரு ஜோடி காட்டுப் புறா என்றே சொல்லப்பட்டுள்ளது. யோசேப்பும் மரியாளும் இயேசுவை பிரதிஷ்டை செய்ய ஆலயத்திற்குக் கொண்டுவந்தபோது, எட்டாம் நாளில் பலியிட்டு விருத்தசேதனம் செய்து சுத்திகரிப்பைச் செய்தபோது, ஒரு ஜோடி காட்டுப் புறாக்களைச் செலுத்தவேண்டும் என்ற கற்பனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஜோடியாக வாழும் காட்டுப் புறாக்களைப் பிரிக்க முடியாது, அப்படி பிரிக்கப்பட்டால் மற்றொன்று தற்கொலை செய்துகொள்ளும். பத்திரிக்கையிலே பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. வேட்டைக்காரன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான், இரண்டு காட்டுப்புறாக்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தன, ஒன்றை அவன் அடித்தான் அது செத்து விழுந்தது. வேடன் அதை எடுத்துக்கொண்டு செல்லும்போது, உடனிருந்த மற்றொரு புறாவும் வழியில் செத்துக் கிடந்தது. வேடன் அதைப் பார்த்தபோது, அதன் தொண்டையிலே கூழாங் கல் இருந்தது. உடனிருந்த புறாவை வேடன் வீழ்த்திவிட்டதினால், அதன் ஜோடியான இந்தப் புறா கூழாங்கல்லை விழுங்கி தற்கொலை செய்துகொண்டதை வேடன் அறிந்துகொண்டான்.
ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்த மனிதனும் இப்படியே இருப்பான். என் சரீரத்தை, ஆவியை, ஆத்துமாவை மாசுப்படுத்த விடமாட்டேன் என்று உறுதியான தீர்மானத்தை எடுக்கிற வாலிபர்கள் ஆண்டவருக்குத் தேவை. ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் கறைபடவிடாமல் காத்துக்கொள்கிற வாலிபர்கள் இன்றும் உண்டு. எந்த சூழ்நிலையில் நீ வைக்கப்பட்டாலும், எந்த சூழ்நிலை எதிராக வந்தாலும், எவரும் உடன் நிற்காமல் போனாலும், என் ஆண்டவருக்காக ஆவி, ஆத்துமா, சரீரத்தை மாசு படாமல் காத்துக்கொள்ளுவேன் என்று தீர்மானம் எடுத்தால், நீ வித்தியாசமுள்ளவனாகவும், மற்றவர்களையும் ஈர்க்கிறவனாகவும் மாறிவிடுவாய்.
வாலிபனே!... உன்னைத் தீட்டுப்படுத்துகின்ற காரியங்கள் எந்த விதத்திலும், எந்த ரூபத்திலும் வந்தாலும் அதற்கு இடம் கொடுத்துவிடாதே. ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்ட பாத்திரமாக, முத்திரிக்கப்பட்ட பாத்திரமாக, கிராமங்களில், நகரங்களில், குடும்பத்தில், கல்லூரிகளில், வேலை ஸ்தலங்களில் வித்தியாசமான வாழ்க்கை வாழவே கர்த்தர் உன்னை அழைத்திருக்கிறார்.
(சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)