கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபத் தம்பி தங்கையரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில், 'மாடர்ன்' (Modern) என்ற பெயரில் உலகில் பலவிதமான காரியங்களும் பழக்கவழக்கங்களும் வலம்வந்துகொண்டிருக்கின்றன என்பது நாமறிந்ததே. சக மனிதர்களைக் காட்டிலும் சற்றாகிலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காண்பித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், சிகை அலங்காரம் செய்வதிலும், ஆடை மற்றும் ஆபரணங்களை அணிவதிலும் அதிக கவனம் செலுத்தும் வாலிபர்கள் இன்றைய நாட்களில் அநேகர். அத்துடன், தாங்கள் விரும்புகின்ற அல்லது தங்கள் மனதிற்குப் பிடித்தமான பிரபலங்களைப் போல தங்களை மாற்றிக்கொள்வதிலும், அவர்களது சாயலுக்கு ஈடானதாகத் தங்கள் சரீரத்தை ஒப்பனையாக மாற்றிக்கொள்வதிலும், அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்வதிலும் திருப்தியடைந்துவரும் வாலிபர்களும்கூட இந்நாட்களில் அநேகர் உண்டு. அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகக் காட்சியளித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமலும், அதனைத் தொடரும் ஆபத்துகளையும் மற்றும் தொக்கி நிற்கும் பின்விளைவுகளையும் உணராமலுமேயே தொடர்கிறது அத்தகைய வாலிபரின் வாழ்க்கை. என்றபோதிலும், அவை அனைத்தும் நிலையானவைகள் அல்லவே; சீக்கிரத்தில் நீங்கிப் போய்விடுபவைகள், இவ்வுலக வாழ்க்கையோடு விடுபட்டுவிடுபவைகள். 'இவ்வுலகத்தின் வேஷம்
கடந்துபோகிறதே" (1கொரி. 7:31) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, பிரியமான வாலிபரே! மரணம் வரையிலான இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டவர்களாக அல்ல, மரணமில்லாத நித்திய இராஜ்யத்தை மனதில் கொண்டவர்களாக இவ்வுலக வாழ்க்கையைக் கடந்துசெல்ல அழைக்கப்பட்டவர்கள் நாம்.
ஆதியிலே, தேவன் மனிதரைச் சிருஷ்டித்தபோது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:27) என்றே வாசிக்கின்றோம். ஆனால், அதனை விரும்பாத இவ்வுலகத்தின் அதிபதியாகிய சத்துருவோ, அந்தச் சாயலைக் கறைபடுத்தவும், தன்னுடைய சாயங்களை அதன் மீது பூசி அதனை தனக்குக் கீழ்ப்படுத்திவிடவும் முயற்சிக்கிறான்; இதற்கு ஒதுபோதும் நாம் அடிமையாகிவிடக்கூடாதே!
பிரியமான வாலிபரே! தம்மைப் போல மாற்றவே தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே வேதத்தின் சத்தியம். 'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18) என்று வாசிக்கின்றோமே; தன்னுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும், நற்காரியங்களிலும் பிதாவையே வெளிப்படுத்தின அந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதற்கும் வாழுவதற்கும் நம்மை அர்ப்பணிப்போமென்றால், தேவனுடைய சாயலை நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் நாம் வெளிப்படுத்த முடியும். இந்த உலகத்தினால் கறைபட்ட நம்மை கழுவுவதற்கும், பாவங்களை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை நமக்கு உடுத்துவிக்கிறதற்கும்தானே தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பித்தந்தார். வழியாகிய அவரது வழிகளிலேயே வாழ இந்த வாலிபத்தின் நாட்களை அர்ப்பணிப்பது, அவரது சாயலை உங்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கச்செய்துவிடுமே!
அதுமாத்திரமல்ல, அவரை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவரையே மாதிரியாகவும் கொண்ட வாழ்க்கை, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்ற நிலைக்கும், 'அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்" என்ற நிலைக்கும், 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" (மத் 5:14-16) என்ற நிலைக்கும், உங்களுடைய வாலிபத்தின் தரத்தை உன்னதம் விரும்புகின்ற தரத்திற்கு உயர்த்திவிடும் என்பதும் உண்மையே! 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (யோவான் 15:4) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படியென்றால், நாம் அவரில் நிலைத்திருப்போமென்றால், அவரையே மாதிரியாகக் கொண்டிருப்போமென்றால் நம்முடைய வாலிபத்தின் நாட்கள் அதிகக் கனிகளைக் கொடுக்கிறவைகளாக மாறிவிடுமே! அதனால் பரலோகம் களிகூருமே! அப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் உங்கள் ஒவ்வொருவரின் வாலிபத்தையும் தேவன் வழிநடத்துவாராக! அறுவடை நாளில் பதராய் அல்ல, கோதுமையாய் களஞ்சியத்தில் சேர்க்கப்படட்டும் உங்கள் வாழ்க்கை.-எலிசபெத்