கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். வாலிபப் பருவம் என்பது மனித வாழ்வின் மிகவும் முக்கியமான ஒரு பகுதி. உலகில் எதையாகிலும் சாதித்து வாழ்வில் உயர்நிலையை அடையவேண்டும் என்ற எண்ணமும் மற்றும் சமுதாயத்தைச் சீர்த்திருத்தவேண்டும் என்ற துடிப்பும் இப்பருவத்தில் ஏற்படுவது இயல்பே. வாலிபத்தில் அநேகர் வேகமாகவும் விவேகமாகவும் ஓடி, தன் இலக்கை அடைய இரவு பகலென உழைத்து உயர்நிலைக்கு வருவது உண்டு. ஆனால், அநேகர் விவேகமில்லாமல் ஓடி படுகுழியில் விழுந்து தங்கள் வாழ்வைச் சீரழித்துக்கொள்கிறார்கள். தேவனால் கொடுக்கப்படும் உயரிய மேன்மையாகிய வாலிபத்தை நாம் சரியாய்க் காத்து, சரியான பாதையில் பொறுமையாய் ஓடினால் நம் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும். ஆகவே, வாலிப வயதில் நாம் செய்ய வேண்டிய சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள யாசிக்கின்றேன்.
1) தேவனுக்கு பயந்து நடவுங்கள்
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி. 1:7). பிரியமான வாலிபரே! வாலிப வயதில் தேவனுக்குப் பயந்து நல் வழியில் நடக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். நாம் கல்வி கற்கின்ற இடங்களிலும், பணிபுரிகின்ற இடங்களிலும் பலவிதமான நண்பர்கள் காணப்பட்டாலும், சரியான நண்பர்களை தெரிந்தெடுத்துப் பழக நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளை, 'அது தேவனுக்குப் பிரியமானதா" என ஆராய்ந்து அறிவது நல்லது. சிலர், நண்பர்களது ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பெற்றோருக்கும் கூட அதைத் தெரியப்படுத்தாமல், இரகசியமாகவே செயல்படுத்தி, இறுதியில் கண்ணியில் சிக்கிக்கொள்ளுகின்றனர்; மரணத்தின் விளிம்பிற்கே செல்லும் வாலிபர்களும் உண்டு. நண்பர்கள் தவறான வழியைக் காட்டும்போது நாம் அதற்கு சம்மதிக்கக்கூடாது (நீதி 1:10). நீங்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தாலும், முதலாவது உங்கள் பெற்றோர்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தி, தேவ சமுகத்தில் மனம் சமாதானமாக இருந்தால் மட்டுமே அதைச் செய்யத் தொடங்குங்கள். தேவ பயத்தோடே ஒவ்வொரு காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவித்து நம்பிக்கையோடே செயல்படுத்துங்கள். அப்போது அது நமக்கு வெற்றியாக அமையும். அவர் உங்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்கிறவர். உங்களை தூக்கி எடுப்பவர் மற்றும் அனைத்தையும் புதிதாக மாற்றுபவர்.
2) வேத தியானத்தை வழக்கமாக்குங்கள்
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாய் இருக்கிறேன். நாள் முழுதும் அது என் தியானம் (சங். 119:97). சங்கீதக்காரன், உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேதத்தை அதிகமாக நேசித்தான். ஆகவேதான், அதனை தனது தியானமாக்கிக்கொண்டான். வேதவசனமே நம் கால்களுக்குத் தீபமாகவும், நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது (சங். 119:105). வேத வசனம் நம் இருதயத்தில் எழுதப்படும்போது, அது நம்மை உலகத்தின் பாவங்கள், ஆசை இச்சைகள், தீய எண்ணங்கள் போன்றவைகளிலிருந்து காக்கும். வேதத்தை தியானிப்பவன் சுத்த இருதயமுள்ளவனாகவும், உணர்வுள்ளவர்களாகவும் இருப்பான். அது நம்மை எச்சரிக்கிறது, சீர்ப்படுத்துகிறது. ஞானவான்களாக்குகிறது, தெளிவிக்கிறது, பிரயோஜனமுள்ளவர்களாகவும் உருவாக்குகிறது. செல்போனில் அதிகமாக நேரத்தை உபயோகிப்பதையும், தேவையற்ற நண்பர்களோடு சுற்றுவதையும், வீணான காரியங்களைப் பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்த்து, வேதத்தை தியானித்தால், சத்தியம் நம்மை சுத்தமாக வைப்பது மட்டுமல்லாமல், சீரான பாதையிலும் எடுத்துச் செல்லும் (சங் 1:1-3). வாலிபனான யோசுவா பெருந்தலைவனாக மாறியதற்குக் காரணம், அவனது வேத தியானமும் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட அவனது வாழ்வும் தானே! சோம்பேறிகளாயிராமல் வேதத்தை தியானித்து வாழ்வை சுத்தமாக வைத்துக் கொள்ளுவோம்.
3) எதிர்பாலரிடம் கவனமாயிருங்கள்
பன்னிரண்டு வயதிற்குப் பிறகு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்பாலர் மேல் ஒரு ஈர்ப்பு வருவது இயல்பு தான். வாலிப வயதில் எப்போதும் எதிர்பாலரை பார்த்துக்கொண்டே இருக்கவும், அவர்களோடே பேசிக்கொண்டே இருக்கவும் மனம் நினைக்கும். இன்று, படிக்கவேண்டிய காலத்தில் அநேக வாலிபர்கள் காதல் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் செய்யவேண்டிய வயதில், நடைப்பிணமாகச் சுற்றித் திரிகிறார்கள். அப்படியே, சிம்சோன் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் அவன் கண்களுக்குப் பிரியமானவளாகத் தெரிந்தாள் (நியாயா. 14:7). உடனே அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றான். பெற்றோரின் ஆலோசனை அவன் செவிகளில் ஏறவே இல்லை. ஆளைப்பார்த்து அழகில் மயங்கி திருமணம் செய்தான். ஆனால், அவனது வாழ்வோ நரக வாழ்வாக மாறிவிட்டது. மனைவியை இழந்து, சரீர இச்சையைப் போக்கிக்கொள்ள விபச்சாரிகளின் மடியில் வாழ்வைக் கழிக்கவேண்டியிருந்தது. அவ்வாறே, அம்மோன் வாலிப வயதில் கண்களின் இச்சைக்கு இடங்கொடுத்து, தன் சகோதரியினிடத்திலேயே மதியீனமாய் நடந்துகொண்டான்; தன் வாழ்வில் மகிழ்ச்சியைக் காணாமல் வெறுப்பையே கண்டான். ஆகவேதான், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2 தீமோத் 2:22) என்று வேதம் சொல்லுகிறது. யோசேப்பைப் போல பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுங்கள். தேவன் உங்களை உயர்வான இடத்தில் வைப்பார். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
