கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத் தங்கங்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்கள் வாலிபத்தின் நாட்களை அவருக்குப் பிரயோஜனமாக மாற்றி, இவ்வுலகத்தின் வழிகளிலே உங்கள் வாலிபத்தின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளாமல் உங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கும் பரலோகப் பிதாவுக்கே எல்லா துதியும், கனமும், மகிமையும் உண்டாகட்டும். பிரியமான வாலிபரே! பாவம் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் நாம் இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பரிசுத்தரோடு பரிசுத்தமாக நடக்க நமது வாழ்க்கையைப் பக்குவப்படுத்தவேண்டுமல்லவா? 'நாட்கள் பொல்லாதவைகளானதால்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:16) என்பது வேதம் நமக்குத் தரும் அறிவுரையல்லவா! எனவே, வாலிபத்தின் நாட்களில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாதே!
ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு, குடி போதையின் உச்சத்தில் அவனே தன்னிடம், ' நான் யார்?" 'நான் இங்கே ஏன் இருக்கிறேன்" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்பதுண்டுளூ ஏனென்றால், குடி போதையின் உச்சத்தால் தன்னைத் தானே அவன் மறந்துவிடுவதால் உண்டாகும் விளைவு அது. அவ்வாறே, சிலர் பணத்தின் மிகுதியால் உலக ஆடம்பரத்துக்குள் அகப்பட்டு, அவர்களது வாழ்க்கையும் ஆட்டம் கண்டு நிற்கிறது. கிறிஸ்தவனும்கூட சில வேளைகளில் தன்னை யாரென்றே மறந்து, உலகில் நிலை குலைந்து வாழ்கிறான்ளூ ஞாயிறு ஆராதனையில்தான் அவனுக்குள் தானும் ஒரு கிறிஸ்தவன் என்கிற எண்ணம் வருகிறது. சிலருக்கு இந்த உணர்வும் இருப்பதில்லை; காரணம், இவர்களுக்கு ஞாயிறு அன்று ஆலயத்துக்கு வந்து தேவனை ஆராதிக்கக்கூட நேரம் இருப்பதில்லை; ஏனென்றால், உலக நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டும், ிைஉெைஉ என்ற பெயரில் ஊரைச் சுற்றி நேரம் கழிப்பதும் ஞாயிறு அன்று தான். இதுவே இன்றைய இளைய கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலை; என்ன ஒரு பரிதாபம் ?
காலங்கள் மாறி மாறி, கலாச்சாரம் கலைந்து, கலங்கி கிடக்கும் இந்த நாட்களில், வாலிபர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்கிறதே! 'வாலிபர்கள் இந்த தேசத்தின் வருங்காலம்" என இவ்வுலகத்தில் ஒரு வழக்கச் சொல் இருந்தாலும், இச்சொல், கிறிஸ்தவ உலகத்திற்கும் நன்றாகவே பொருந்தும். நம்முடைய தேசத்தில் கிறிஸ்துவை அறியாத அநேக நண்பர்கள் உடன் பயிலுவது உண்டு, உடன் பணி செய்வது உண்டு. இவர்களுக்கு முன்பாக நம்முடைய வாழ்க்கைத் தரத்தை ஒரு கிறிஸ்தவனாக மாற்றி நிறுத்தாத பட்சத்தில், நாம் மற்றொருவரை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்த இயலாதே! நம்முடைய வாழ்க்கையின் நிலை என்ன? உலகத்தோடு இணைந்து ஆசா பாசங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் அடிமைப்பட்டு இருக்கிறதோ? ஆராய்ந்து பார்ப்போம். "வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9) என்று வேதம் கூறுகிறதே.
இன்றைய நாட்களில், அநேகர் இணையத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் படவரி (Instagram)) புலனம் (WhatsApp), தந்தி (Telegram), முகநூல் (Facebook), செய்தி பரிமாற்றச் செயலி (Messenger) போன்ற இப்படிப்பட்ட செயலிகளில் வீணாக நேரத்தைச் செலவிடுகிறார்கள், இதில் முக்கியமாக வாலிபர்கள் தங்கள் வேலைகளையும் மற்றும் தங்கள் பொறுப்புகளையும் விட்டு ஆன்லைனில் பல மணி நேரங்கள் கிறிஸ்தவர்களுக்கும் தகாதஇணையதளங்களைப் பயன்படுத்தி, தங்கள் இருதயங்களை பாவத்தால் கறைபடுத்துகின்றனர் மற்றும் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் இணையம் இன்றியமையாதது தான். ஆனால், அதுவே உன்னுடைய இணையாக மாறிவிட்டால், உன் வாழ்க்கையை அது இல்பொருளாகவும் மாற்றிவிடும் என்பதை மறந்துவிடாதே! அதுமாத்திரமல்ல, அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவோடு உள்ள உறவையும் துண்டித்து, அவரது அன்பில் இருந்தும் நம்மைப் பிரித்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றபோதிலும், இன்றைய இளைய சமுதாயத்தை இணையம் இளைப்படையாமல் இணைந்திருக்க வைத்துள்ளதை இல்லையெனக் கூறிட இயலாதே...
நண்பனே, நீ எங்கே இருக்கிறாய்...?
வாலிப சகோதரனே, சகோதரியே, உன்னை நேசித்து, உனக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்து தம்முடைய பிள்ளையாக மாற்றின அந்த நல்ல இயேசுவை விட்டு தூரம் போய் நிற்கிறாயோ? ஜெபிக்கவோ, வேதவசனம் தியானிக்கவோ நேரம் இல்லாதவர்களாக ஓய்வில்லாமல் அர்த்தமற்றவைகளில் அகப்பட்டு, தேவனை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாயோ? ஆதாமையும் ஏவாளையும் படைத்த அன்பு தேவன் தோட்டத்தில் வந்து, ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்று அவனைத் தேடினாரே! (ஆதியாகமம் 3:9) அதே தேவன், இன்றும் உன்னைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்கிறார்ளூ தம்பியே, தங்கையே சற்று சிந்தித்துப்பார் 'நீ எங்கே இருக்கிறாய்?" உணர்த்தவில்லையோ இன்றும் உன்னை உருவாக்கத் துடிக்கும் உன்னதரின் வசனம்? உன் உள்ளத்தை உருக்கவில்லையோ கல்வாரியில் உருக்குலைந்த உன்னதர் இயேசுவின் மரணம்?