November 2025

 





    அருமையான வாலிப தம்பி, தங்கச்சி,  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது அன்பின் வாழ்த்துகள். ஒரு கேள்வியோடு உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உன் வாழ்க்கையில்  எதை முதன்மையாக வைத்து நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? சுயமரியாதையோடு வாழ்வதற்கான படிப்பா? உன் மனதை நிறைவு செய்யும் நண்பர்களா? நினைத்ததைச் சாதிக்கவைக்கும் பணமா?   எதையும் சிறப்பாகச் செய்ய வைக்கும் திறமைகளா? எல்லாராலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற  எண்ணமா? உன்னத நோக்கத்தோடு உன்னைப் படைத்த தேவாதி தேவனைக் குறித்ததா? இந்தக் கேள்விக்கான உன் பதில் தான் உன் இதயம் அமைதியால் நிரம்பி இருக்கிறதா? அல்லது கவலையால் பாரமாக இருக்கிறதா? என்பதை வெளிப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட காரியங்களைப் பார்க்கும்போது, எல்லாமே எனக்கு தேவையானது தானே என்று நீ கேட்கலாம். ஆம், தேவையானது தான்; ஆனால் உன் வாழ்வில் முதன்மையான இடத்தை யாருக்கு, எதற்கு கொடுத்திருக்கிறாய்? 

    வேதமே வழிகாட்டி: வேத வசனத்தில் நாம் பார்க்கும் போது, மத்தேயு 6 : 33 இல்: “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பொருந்தும் மேன்மையான கட்டளையை இந்த வசனத்தில் பார்க்கிறோம். இதுதான் உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மையான வெற்றி, தேவனுக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதில் தான் உள்ளது.

'இருட்டில் பாடும் பறவை" என்று அழைக்கப்பட்ட ஃபேன்னி கிராஸ்பி  ஆறு வார குழந்தையாக இருக்கும்போதே கண் பார்வையை இழந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்தும் 8000 பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வேதாகமத்தில் அத்தியாயங்களையும், முழு புத்தகங்களையும் கூட மனப்பாடம் செய்து மேற்கோள் காட்டும் திறன் அவருக்கு இருந்தது. ஒரு பெரிய ஊழியர் அவரைப் பார்த்து, “உனக்கு அநேக திறமைகளைப் பரிசாக அளித்த உன் பரம எஜமானர், பார்வையை மட்டும் தராதது பரிதாபத்திற்குரியது” என்று கூறினார். அதற்கு கிராஸ்பி இப்படியாகப் பதிலளித்தார்: “நான் கண் பார்வை இல்லாதவளாய் பிறந்தது பரிதாபத்திற்குரியது அல்ல; நான் என்னை பாக்கியசாலியாக கருதுகிறேன். ஏனென்றால,; நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு முன்பாக, பரலோகத்துக்கு செல்லும்போது, என் கண்கள் முதலாவது இயேசு கிறிஸ்துவைக் காணும்.... அதையே நான் விரும்புகிறேன்.” அதுவே அவளுடைய முன்னுரிமை! வாழ்வின் கடினமான சூழ்நிலையும் கூட, தேவனுக்கு கொடுத்த முன்னுரிமையை கிராஸ்பியிடமிருந்து பறிக்க முடியவில்லை.

இன்றைய இளைஞர்களின் மனம் பல திசைகளிலும் இழுக்கப்படுகிறது. இதனால், அவர்களின் மனதில் கவலை நிறைந்து இருக்கிறது. அது மகிழ்ச்சியைத் திருடுகிறது; தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது; வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது, இப்படிப்பட்ட கவலைகளிலிருந்து விடுபடமுடியும். மத்தேயு 6 : 26 – 30 வசனங்களில்: ஆகாயத்து பறவைகளுக்கு உணவு கொடுக்கிற தேவன், காட்டு புஷ்பங்களுக்கு உடை கொடுக்கிற தேவன், மிகவும் விசேஷித்தவர்கள் ஆகிய நமக்கு அன்றாடத் தேவைகளை கொடுக்க போதுமானவராய் இருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது: தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் முதலாவது தேடவேண்டும். தேவன் நம் வாழ்வில் முதலிடத்தில் இருக்கும்போது, மற்ற அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக வந்தடைகின்றன. உங்கள் வாழ்க்கையில் தேவனை முதன்மையாக வைக்கும் போது, நீங்கள் எதையும் இழந்துபோவதில்லை. 

தேவனுக்கே முதலிடம் : ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், மிஷனரியுமான எரிக் லிடெல், தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டியதைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரர். ஒருமுறை அவருக்கே உரிய சிறந்த போட்டியில் ஓட மறுத்துவிட்டார்;. ஏனெனில், அது ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாளில் நடக்கவிருந்தது. போட்டியில் ஓட மறுத்ததால் மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால், அவர் கர்த்தருடைய நாளை கனப்படுத்த விரும்பினார். அதனால், தேவன் அவரை உயர்த்தினார்.  அவர் தனக்குப் பழக்கம் இல்லாத மற்றொரு பந்தயத்தில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை “என் வாழ்வின் முதன்மை தேவனுக்கே, என் புகழ் அதற்குப் பின்பே” என்பதை இன்றும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறை வழிமுறைகள்: உங்கள் நடைமுறை வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதன்மையான இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள் (மத்தேயு 22: 37,38). ஜெப நேரம் மற்றும் வேத வாசிப்புக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முழு மனதோடு செய்யுங்கள் (தானியேல் 6:10 ரூ சங்கீதம் 1:2,3).  ஒரு குறிப்பிட்ட வேளையில், சமூக ஊடகங்களை அமைதிப்படுத்தி விட்டு தேவனோடு அமர்ந்திருங்கள் (பிலிப்பியர் 4:8). சிறிய, பெரிய தீர்மானங்களிலும் தேவனிடம் ஆலோசனை கேட்டு பழகுங்கள் (1 சாமுவேல் 23:2,4,11,12). உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தி உள்ளதாகவும் மாறும்.

தீர்மானம் எடுங்கள்: இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான அன்றாட விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, புறஜாதியாரைப் போல வாழ்வதற்குச் சமம்! நம் வாழ்வில் தேவ சித்தத்தையும், தேவ நீதியையும் முதன்மையாக வைத்தால் அவர் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்வார். மத்தேயு 6:33 ஐ தேவனுடைய பிள்ளைகள் கடைப்பிடித்தால் இந்த உலகத்தில் நற்சாட்சி பெற்று வாழமுடியும். ஆனால், நம்மில் பலர் அதை கடைப்பிடிக்கத் தவறுவது எவ்வளவு  துக்கமான காரியம்! அருமையான தம்பி, தங்கச்சி! இந்த வாலிப வயதில்  அசைக்க முடியாத தீர்மானத்தோடு, தேவனுக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்வாயா?  நீ எடுத்த தீர்மானத்தில்  உறுதியாக இருக்க தேவன் தாமே உதவி செய்வாராக. ஆமென்!

                                                                                                 சகோதரி. கிருபா எமர்சன்