கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்கும் சாட்சிகளாக
அழைக்கப்பட்டவர்கள் நீங்கள்; என்றபோதிலும்,
வாலிபத்தின் ஓட்டத்தில்
ஒருவேளை நான் விழுந்துவிடுவேனோ? என்ற பயத்துடனேயே
ஓடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் உண்டு. எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற கேள்விகளை ஒருவேளை சுயமாக நீங்கள்
கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க
உங்கள் உள்ளத்திற்கும் உதடுகளுக்கும் பெலனிருக்காது. நினையாத நேரத்தில்
விழுந்துபோன வாலிபர் பலர்; நினைத்திருந்தும்
கவனக்குறைவினால் விழுந்துபோன வாலிபர் பலர்; தடுக்குவதும் மற்றும் தள்ளுவதும்
பெலமுள்ளதாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமலிருப்பதினாலும் வீழ்ந்துபோன வாலிபர்
பலர்; உதவுவார் மற்றும்
தூக்கிவிடுவார் எவருமின்றி ஒண்டியாய் வழிகளில் வீழ்ந்து கிடக்கும் வாலிபர் பலர்;
அவ்வாறே, எதிரியின் பாதையில் தொடர்ந்து பயணித்து,
தொலைதூரம் சென்றபின்பு
வீடு திரும்ப திசையறியாமல் திணறும் வாலிபரும் உண்டு.
பிரியமான வாலிபரே! பாவத்தினால், பாவம் செய்யும் வாலிபரது வாழ்க்கையில் தன்
பெலமே ஓங்கி நிற்கவேண்டும் என்றும், தன் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றும் நினைப்பவன் சத்துரு. எனவே, விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல்,
உங்கள் ஆத்துமாவின்
பெலத்தை அதிகரித்து, வாலிபத்தை
கிறிஸ்துவுடன் வலிமையுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.
எப்படியாகிலும் கிறிஸ்துவை விட்டு உங்களைப்
பிரித்து, தன்னோடு
சேர்த்துவிடவேண்டுமென்று, வெவ்வேறு
விதங்களில் உங்களைச் சூழ சத்துரு யுத்தம் செய்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன்
யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ,
பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் 'அன்புகூறுகிறவராலே முற்றும்
ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலும்
காணப்படுமாயின் 'நீங்கள்
அன்புகூருகின்ற கிறிஸ்துவினாலேயே உங்கள் வாழ்க்கையிலும் ஜெயம் உண்டாகும்"
என்பது நிச்சயம். 'உயிரைப்
பறித்தாலும் உறுதியாயிருப்போம்" என்று தானியேலைப் போல நீங்கள் நின்றால்,
பிதாவுடனான உறவினின்று
உங்களைப் பிரிக்க பெலனற்றவனாகிவிடுவான் சத்துரு. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப்
பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:38,39) என்ற 'அழுத்தமான அர்ப்பணிப்பு" உங்களுக்கு இருந்தால், அச்சம் அவசியமில்லை.
பிரியமான வாலிபரே, 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்,
பலமும், அன்பும், தெளிந்தபுத்தியுள்ள ஆவியையே
கொடுத்திருக்கிறார்" (2தீமோ. 1:7).
அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும்
சந்துபொந்துகளை அடையாளம் கண்டு அவைகளை அடைத்துவிடுங்கள்; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27).
ஆனாலும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு; அது, தன் பக்கத்திலிருக்கும் வீழ்ந்தவர்களை, உங்களை வீழ்த்துவதற்காகச் சத்துரு பதிவிருக்கச் செய்வது. ஆம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை (கும்கி) காட்டிலிருக்கும் பிற யானைகளோடு பழகச்செய்து மனிதர்கள் பிடிப்பதைப் போல, தனது கட்டுப்பாட்டில், தனது வலையில், தனது எல்லைக்குள் மற்றும் தனது சொற்படி கேட்கும் வாலிபர்களைக் கொண்டு, பிற வாலிபர்களை தனது வலைக்குள் இழுக்கும் சத்துருவின் தந்திரத்தை வாலிபராகிய நீங்கள் அறிந்துகொண்டு உங்களைத் தப்புவித்துக்கொள்வது அவசியம். தன்னோடு பேசுகிற மற்றும் பழகுகிறவர்கள் யாரென்ற அறிவில்லாத வாலிபர்களின் வாழ்க்கையிலிருந்து ஆண்டவரை அகற்றிவிட இத்தகைய வாலிபர்களை சத்துரு பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகள், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்கள், அவர்களுக்குள் இருக்கும் பயங்கள், அவிசுவாசம் மற்றும் உலகத்திற்கடுத்த காரியங்கள் உறவில் தொடங்கி உங்கள் உயிரில் கலந்துவிடக்கூடும்; விதையாகி வளர்ந்து, விரோதியின் சத்திரத்திலும் உங்களைச் சேர்த்துவிடக்கூடும்; எச்சரிக்கை!! காயம்பட்டுக் கிடக்கும் நேரத்தில், கண்ணீர் விடுவது யாரென்று தெரியாததினால்,அவர்களுடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தடையமேயில்லாமற்போய்விட்ட வாலிபர்கள் உண்டு.
தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு
எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி. 10:12)
