கிறிஸ்துவில் பிரியமான தம்பி, தங்கச்சி உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மே மாதத்தில் எங்கேயாவது சுற்றுலா செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா? ஜம்மு காஷ்மீர், சிம்லா போன்ற இடங்களில் பனி பெய்கின்ற காலங்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சுற்றுலாவுக்கு வருகிறவர்கள் பனி பொம்மைகளைச் செய்தும் மற்றும் பனி உருண்டைகளை வைத்து ஒருவர் மேல் ஒருவர் வீசியும் விளையாடுவார்கள். நான் ஒரு காணொளியில் பனிப் பந்துகளைக் குறித்து கவனித்தேன். அதில் ஒருவர் ஒரு சிறிய பனிப் பந்தை உருவாக்கி அதை உருட்டிவிடுகிறார்; அது உருண்டுபோகும்போது, அதிக பனித்துகள்களைச் சேர்த்து சேர்த்து மிகப்பெரிய பனிப் பந்தாக மாறிக்கொண்டே போனதைப் பார்த்தேன்; மிகவும் அழகாக இருந்தது. உளவியலில் 'பனிப் பந்து விளைவு' என்பதைக் குறித்து மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும் எடுக்கும் சிறிய முடிவுகள் மற்றும் அறியாமலேயே கடைப்பிடித்துவரும் பழக்கவழக்கங்கள் அல்லது நிகழ்வுகள் எவ்வாறு படிப்படியாக குறிப்பிடத்தக்க விளைவுகளை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உண்டாக்க வழி வகுக்கும் என்பதையே இது குறிக்கிறது.
இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல கனவுகளை உடையவர்களாக இருக்கலாம்; வெகுவிரைவில் அது சாத்தியமாகவேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம்; சாதிக்க முடியாமல் வீழ்ச்சியடைந்து விடுவேனோ என்ற பயமும் உங்களுக்குக் காணப்படலாம்; குறிப்பாக தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் திட்டத்தை அறிந்து அதை நிறைவேற்றவும், தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் மிகவும் வாஞ்சையோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். என்றபோதிலும், உங்கள் வாழ்வின் உயர்வும் வீழ்ச்சியும் ஒரே நாளில் கிடைப்பதோ அல்லது நடந்து முடிவதோ இல்லை. துவக்கத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களது எதிர்காலப் பாதையினை வடிவமைக்கக் கூடியவைகளாக உள்ளன. வேதாகமத்திலிருந்து இரண்டு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.
1. ஆசீர்வாதத்தை அலட்சியம் பண்ணின ஏசா : ஆதியாகமம் 25 : 28 - 34
நன்றாக வேட்டையாடுகிறவன், நன்றாகச் சமைக்கிறவன், தகப்பன் நேசித்த மகன், சேஷ்ட புத்திர பாகத்தின் சுதந்திரவாளி....... இப்பொழுதோ வேட்டையாடி மிகவும் களைத்துப்போய் இருக்கிறான். இந்த வேளையிலே களைப்பின் எண்ணங்கள்தான் மேலோங்கி இருக்கின்றன. கண்ணுக்கு எதிரே சிவப்பான கூழ்..... சரீரத்திலோ களைப்பு..... தன்னையே மறந்தவனாய் அந்தக் கூழிலே சாப்பிடக் கொஞ்சம் தா என்று கேட்கிறான் ஏசா... இப்பொழுது இருக்கிற நிலைமைக்கு எனக்கு சிவப்பான கூழ் தான் வேண்டும்... இந்த சேஷ்ட புத்திர பாகம் எனக்கு என்னத்துக்கு.....? என்றுதான் ஆரம்பிக்கிறது ஏசாவின் அலட்சிய வார்த்தைகள்.... பின்னர் தொடர்ந்தது ஏசாவின் அலட்சியம்... தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு ஆணையிட்டு, சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டான் (எபிரேயர் 12 : 16,17). ஏசாவின் வாழ்வில் காணப்பட்ட அலட்சியத்தினால், அவனுடைய தகப்பன் ஈசாக்கின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நாம் காண்கின்ற இந்த உலகம் இப்படிப்பட்ட தற்காலிக எண்ணங்களால் சிதைந்து கிடக்கிறது. ஒரு கண நேர ஆசை, உணர்வின் அடிப்படையில் தூண்டப்பட்டு, தொடர்ந்து செய்யப்படும் செயல்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடிக்கும் தவறான முடிவுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திடீரென்று வரும் கோபம் அதிகமாகி, என்ன செய்வதென்று தெரியாமல், அன்பான உறவுகளையும் உடைத்துவிடுகிறது. தற்காலிக ஆசைகள் அல்லது உணர்வுகள் நம் வாழ்வின் நிரந்தர முடிவை எடுக்க நாம் அனுமதிக்க கூடாது. மன அழுத்தத்துக்கு மறுபடி மறுபடி இடம் கொடுத்து மனச்சோர்வு உண்டாகிறது. தவறான ஒரு நண்பனின் சகவாசம், பின்பு தவறான கூட்டத்தோடு பழக வைத்து கல்வியிலும் ஆவிக்குரிய வாழ்விலும் வீழ்ச்சிக்கு நேராய் நடத்துகிறது. பிழைகள் குற்றங்கள் ஆகி, பின்பு துணிகரமானப் பாவங்களைச் (சங்கீதம் 19 : 12,13) செய்யவைத்து, முடிவில் பெரும் பாதகமாக மாறிவிடுகிறது. அருமையான தம்பி, தங்கச்சி, தற்காலிக உணர்வுகள் உன்னை தவறான முடிவுக்கு கொண்டுபோய்விடும்; எனவே ஒருபோதும் அலட்சியமாக இராதே!
2. ஆசீர்வாதத்தை நாடின யாக்கோபு : ஆதியாகமம் 25 : 31 - 34
ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியப்படுத்தினான். ஆனால், அவன் சகோதரனாகிய யாக்கோபு அதை ஆவலோடு விரும்பினான். அதைக் குறித்த மகத்துவத்தை அவன் அறிந்திருந்தான். தேவன், நாம் எதை விரும்புகிறோம், எப்படி விரும்புகிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்கிறார். யாக்கோபு ஆசீர்வாதமாக இருக்க விரும்பினான்; அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக வந்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் கவனமாகப் பயன்படுத்திக்கொண்டான்;அதற்காகப் போராடினான் (ஓசியா 12 : 3,4), கெஞ்சினான், தன் பெற்றோருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான், தேவ சத்தத்துக்கும் அப்படியே கீழ்ப்படிந்தான். தேவன் தன்னை ஆசீர்வதிக்கும் வரைக்கும் போராடி மேற்கொண்டான். 'இஸ்ரவேல்' என்னும் பெயர் பெற்றான்.
பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நம்முடைய வாழ்க்கையிலும் தொடர்ச்சியான ஜெப வாழ்க்கை, தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ எடுக்கும் முயற்சி, வேத வசனத்தைத் தினமும் தியானிக்கும் வாஞ்சை, தேவனுக்கு அடுத்த காரியங்களில் வாஞ்சையோடு ஈடுபடுதல், மற்றவர்களைக் குறித்த கரிசனையோடு நாம் செய்யும் சிறிய சிறிய சேவைகள்..... இவைகள் நம்முடைய வாழ்க்கையை முடிவில் கிறிஸ்துவைப் போல மாற்றுகிறது. தேவன் நமக்கென்று வைத்த திட்டத்தை நம் மூலமாக நிறைவேற்றுவதோடு, தேவனுடைய முழு ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளும் இடத்தில், உயர்ந்த ஸ்தானத்தில் நம்மைக் கொண்டுபோய் விடுகிறது.
டேவிட் லிவிங்ஸ்டனின் வாழ்க்கையை உங்களுக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரண ஏழ்மை நிலையில் துவங்கினது அவரது வாழ்க்கை, முடிவிலோ ராஜ மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக ஒரு பருத்தி ஆலையில் அவர் வேலை செய்ய நேரிட்டது. கிடைக்கின்ற கொஞ்ச இடைவெளி நேரத்திலும் அவர் தான் நேசித்த வேத புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். இதை கவனித்த அவரது முதலாளி, இடைவெளி நேரத்தில் ஏன் இந்த வேத புத்தகத்தைப் படிக்கிறாய்? என்று கேட்டபோது, 'நான் சங்கீதம் 119-ஐ மனப்பாடமாகச் சொன்னதினால் எனக்கு இந்த வேத புத்தகம் பரிசாக கிடைத்திருக்கிறது" என்றார் டேவிட் லிவிங்ஸ்டன். இதைக் கேட்டவுடன் அவரது முதலாளி அவருக்கு வேத புத்தகத்தை படிக்க அனுமதி கொடுத்தார். எந்தச் சூழ்நிலையிலும் வேத வசனத்தைப் படிக்கும் பழக்கத்தை அவர் விட்டுவிடவில்லை. பின்னர் படித்து டாக்டராகப் பட்டம் பெற்றார்.
தன் ஏழ்மையில் டாக்டர் பட்டம் பெற்றதை வைத்து, நன்றாகப் பணம் சம்பாதித்து அவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், தான் தொடர்ந்து தியானித்து வந்த வேத வார்த்தைகள், அவரை தேவையில் உள்ள ஜனங்களுக்கு சேவை செய்ய ஊக்குவித்தது. அவருடைய நெருங்கிய நண்பர், டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் செல்வதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டு அவரை கடிந்துகொண்டார். ஆனால், டேவிட் லிவிங்ஸ்டனோ தேவன் விரும்புகிற சரியான முடிவை எடுக்கவே விரும்பினார். தேவனோடு தொடர்ந்து அவர் வைத்துக்கொண்ட உறவு மற்றும் வேத வார்த்தைகளை தொடர்ந்து வாசித்து தியானித்த பழக்கம் அவருடைய வாழ்க்கையை தேவ சித்தத்தின் மையத்தில் திடமாக நிற்கவைத்தது.
அருமையான தம்பி, தங்கச்சி உங்களை சிருஷ்டித்த தேவன், உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து மிகப் பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவைக் குறித்தும் மிகவும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு உணர்வின் அடிப்படையில் மட்டும் முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்கும் சிறிய, சிறிய ஆவிக்குரிய நல்ல பழக்கங்கள் உங்களை மிகவும் பெரிய, உன்னத நிலைக்கு நிச்சயம் கொண்டு போய்விடும். இந்த வாலிப வயதில் சரியான முடிவுகளை எடுக்க, அதைக் கடைப்பிடிக்க, பழக்கமாக்கிக் கொள்ள தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக !