June 2025


            

 கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். தேர்வு முடிவுகள் உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெற்றோரின் விருப்பங்கள், உறவினரின் எதிர்பார்ப்புகள், மூத்தோரின் அறிவுரைகள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் என்ற சூழ்நிலைகளின் மத்தியில், எதிர்காலத்தைக் குறித்தும் மற்றும் என்ன பயிலலாம் என்பதைக் குறித்தும் நீங்களும் ஆழ்ந்து  சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் இம்மடல் உங்கள் கரங்களை வந்தடையும் என நினைக்கிறேன். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்டோம் என்ற வெற்றிக் களிப்பில் ஒருசிலரும், விரும்பின அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் வேறு சிலரும் மற்றும் தோல்வியைச் சந்தித்ததினால், எதிர்காலம் என்னவாகுமோ? என்ற பயத்துடனும் சிலரும் இந்நாட்களில் ஒருவேளை காணப்படக்கூடும்.   

'குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி. 21:31) என்று வேத வசனத்தின்படி, எத்தனையாய் நீங்கள் ஆயத்தப்பட்டீர்களோ, அத்தனையான பதில் நிச்சயம் உங்களுக்கு அளந்துகொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான பலனை அடைந்திருப்பீர்களென்றால், தொடர்பயணத்தில் தொய்வு காட்டிவிடாமல் முன்னேறிச்செல்வதில் நீங்கள் உறுதியாயிருக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். 'வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு", 'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்", 'அடிக்க அடிக்க அம்மியும் நகரும்", 'எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்ற பழமொழிகள் அனைத்தும் நம்மிடம் காணப்படவேண்டிய தொடர் முயற்சிகளைத்தானே முன்வைக்கின்றன. 

'படிப்பதற்கே தகுதியற்றவன்" என்று ஆசிரியர்களால் தள்ளப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனின் 1000 முறைக்கும் மேலான தொடர் முயற்சிகளின் விளைவினால் கண்டுபிடிக்கப்பட்டதுதானே மின்விளக்கு, அதுபோலவே, K.F.C கர்னல் சாண்டர்ஸ், இவரது Chicken உணவு ஏராளமான உணவகங்களில் நிராகரிக்கப்பட்டது; என்றபோதிலும், தன்னம்பிக்கை இழக்காமல் அவர் முயற்சித்ததின் பலனால், உலகப்பிரசித்திப் பெற்ற உணவகமாக KFC உருவாகிவிட்டதே! மேலும், உலகப் புகழ்பெற்ற 'மிக்கி மவுஸ்" கார்டூன் படைப்பாளி மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிறுவனர் வால்டர் எலியாஸ் டிஸ்னி, 'படைப்பாற்றல் இல்லை" என்ற காரணத்திற்காக பத்திரிக்கை வேலையை இழந்தவர். என்றபோதிலும், தொடர் முயற்சினால், Walt Disney Company என்ற உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனம் உருவாகக் காரணமானதுடன், 22 அகாடமி விருதுகளையும் மற்றும் 2 ஆஸ்கர் விருதுகளையும்; பெற்றார். எனவே வாலிபரே! தோல்விகள் உங்கள் தொடர்பயணத்தை நிறுத்திவிடக்கூடாது.

எலிசா இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி, 'உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்று சொல்லி, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: ஜன்னலைத் திறவும், எய்யும்" என்று சொன்னபோது, அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது. ஆனால், 'அம்புகளைப் பிடியும்" என்று அவைகளை இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் கொடுத்து, 'தரையிலே அடியும்" என்று எலிசா சொன்னபோது, தன்னுடைய கரங்களால் மாத்திரம் அம்புகளைப் பிடித்திருந்த இஸ்ரவேலின் இராஜா மூன்றுதரம் அடித்து நின்றுவிட்டான். அப்பொழுது தேவனுடைய மனுஷனாகிய எலிசா அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான் (2இராஜா. 13:16-19). பிரியமான வாலிபரே, யாராவது ஒருவர் நமக்கு உதவிசெய்யும்போது, ஊக்கப்படுத்தும்போது அல்லது உடனிருக்கும்போது ஒருவேளை 'நம்மால் முன்னேறிச் செல்வதும் ஓடுவதும் எளிதாயிருக்கக்கூடும்"; ஆனால், 'இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் அம்புகள் கொடுக்கப்பட்டதுபோல" நம்முடைய கரங்களில் மாத்திரம் காரியங்கள் விடப்படுமென்றால், நம்முடைய தொடர் முயற்சி எத்தகையதாயிருக்கும்? இஸ்ரவேல் ராஜாவைப் போல மூன்றுதரம் மாத்திரமே அம்புகளை அடித்துவிட்டு, 'போதும்" என்று நிறுத்திக்கொள்ளுவோமா? அல்லது, தீர முறியடிக்கும்வரை அதாவது வெற்றிபெறும்வரை நாம் செயல்பட்டுக்கொண்டேயிருப்போமா? வாலிபரே! உங்களது தொடர் முயற்சிகள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். 

பேதுரு இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய சீடனாக இருந்தபோதும், மூன்று முறை அவரை மறுதலித்தவன் (லுக்கா 22:61-62). என்றபோதிலும், வருத்தத்துடன் மனங்கசந்து அழுதபோது (மத். 26:75), 'என் ஆடுகளை மேய்ப்பாயாக' என்ற பெரும்பணி பேதுருவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டதே (யோவான் 21:15-17). மறுதலித்த பேதுரு ஆண்டவருக்காக மரிப்பதற்கும் ஆயத்தமாக மாறிவிட்டானே! இத்தகையத் திருப்புமுனை வாலிபரே உங்கள் வாழ்க்கையிலும் உண்டாகக்கூடும்; எனவே, செய்துவிட்ட தவறுகளையும் மற்றும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மனம்வருந்தி விட்டுவிட்டு, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவையுங்கள். 

தாவீது அரசனாக அபிஷேகம்பண்ணப்பட்டவன்; என்றபோதிலும், கண்களின் இச்சையில் இழுப்புண்டு உரியாவின் மனைவியாயிருந்த பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்ததோடு, அவளை தன்னுடையவளாக்க, அவளது கணவனான உரியாவைக் கொல்லவும் ஏற்பாடுகளைச் செய்தான் (2 சாமு. 11 அதி.). ஆயினும், நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் அவனோடு பேசினபோது, பாவத்தை ஒத்துக்கொண்டு, திருந்தி வாழ தன்னை அர்ப்பணித்ததினால் (சங்கீதம் 51), அவருடைய சந்ததியில் இயேசு கிறிஸ்து பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டானே! 

யோனா அழைப்பிலிருந்து விலகி ஓடிய ஒரு தீர்க்கதரிசி; என்றபோதிலும், தேவன் யோனாவை அவனது வழியில் விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை; மாறாக, புயலைக்கொண்டு தடுத்தார். வழிமாறிச் சென்றபோது கப்பலில் சென்றவன், தேவனால் வழிமறிக்கப்பட்டு மீனின் மூலமாக நினிவே பட்டணத்திற்குத் திருப்பப்பட்டபோது, தன் தவற்றை உணர்ந்த யோனா, மீனின் வயிற்றில் ஜெபித்தான் (யோனா 2:1). நினிவே பட்டணத்தார் மனந்திரும்பிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு யோனாவுக்கு இல்லைதான்; என்றாலும், தேவன் அவன் மூலமாக நினிவே மக்களுக்குக் கொடுத்த எச்சரிப்பு அவர்களை மனந்திரும்பச் செய்துவிட்டதே! 

வாலிபரே! நீங்களும் தவறுகளில் தேங்கி நிற்காமல், தேவனண்டை நெருங்கிச் சேருவீர்களென்றால், தேவன் காட்டும் திசையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுவீர்களென்றால் உங்களையும் தேவன் இவர்களைப் போல பயன்படுத்தக்கூடும், நீங்களும் தேவன் கரத்தில் உபயோகமான பாத்திரங்களாக மாறுவது நிச்சயம்.  

                                                                                                                 

     P. J. கிருபாகரன்