July 2026

 

    இந்தக் காலம் வாலிபரின் காலம் அல்லது Gen Z-களின் நாட்கள் என்கின்றனர்... எங்கு பார்த்தாலும் நம் நாட்டிலும் இன்னும் அண்டை நாடுகளிலும் இளம் தலைமுறையினரின் போராட்டங்கள்... தங்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு மற்றும் சில சமூக தீமைகளுக்கு விரோதமாகவும் இன்னும் நல்ல காரியங்களுக்காகவும் போராடுபவர்களாகவும், முக்கியமானத் தீர்மானங்களையும் எடுப்பவர்களாகவும் எழும்பிவிட்டனர்... ஒருவகையில் நல்லது தான்; என்றாலும், பெற்றோர்களும் பெரியவர்களும் ஒருவித பயத்தோடு என்னதான் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறது..? அல்லது, இல்லை, இனி அப்படித்தான் என்கின்றனரோ..! ஒன்று உண்மை; இன்றைய வாலிபரின் இதயங்களை நண்பர்கள் கூட்டம், இன்னும் யார் யாரோ வசப்படுத்தி, இரட்சகரைப் பார்க்கவிடாமல் உண்மையான இவ்வளவு பெரிதான இரட்சிப்பிற்கு நேராய் கவனம் செலுத்தவிடாமல,; வேறு எதை நோக்கியோ திசை திருப்பி விட்டிருக்கின்றனர். பெலனோடு நிற்கத் திராணியற்றவர்கள் போல, கூட்டமாகச் சேர்ந்து பெலமாய் கயிறு கட்டி இழுப்பது போல (Tug of war) இழுக்கப்பட்டு (carried away)  வீழ்த்தப்படுகிறார்கள். சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரியாமல், சரியாக அறிய விடாமல் (Deceptions & Delusions)  வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர் (2தெச2:10). தோற்றத்தை வைத்து அல்லது சில செயல்களைப் (Performance) பார்த்து, இவர்கள் தான் சரி, இவர்களைப் பின்பற்றலாம் என்று தவறாகக் கணித்துவிடுகின்றனர்... யாரையும் வெளிப்புறமாகப் பார்த்து இவர் ஒரு உண்மை கிறிஸ்தவர் என்றோ, அல்லது அவர் சரியல்ல என்றோ ஒருபோதும் சொல்லிவிட முடியாது. 

வேதத்திலே பர்திமேயு, பர்னபா, பரபாஸ், பர்சபா, பர்ஜோனா (யோனாவின் குமாரனாகிய சீமோன்) போன்ற பெயர்கள் உண்டு. திமேயுவின் மகனாகிய பர்திமேயு; அதாவது 'பர்" என்றால் மகன். அது போல பர்யேசு என்ற ஒரு நபரை நாம் வேதத்திலே பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 13 : 6 - 12).பெயரின் அர்த்தம் இயேசுவின் மகன் ஆனால் அவனோ பிசாசின் மகன் (அப்; 13:10). இங்கே பழைய வாழ்க்கையில் - சவுல்; ஆனால், இப்பொழுது, புதிதான, கர்த்தர் தெரிந்து கொண்ட பாத்திரமாக மாறினவர் பவுல். பவுல் என்ற பெயரின் அர்த்தமோ - சிறுமை - எளிமை தான்; ஆனால், இங்கே பெரிய இயேசுவின் மகனாக உயர்ந்து நிற்கும் பவுல் அந்த நபரை எதிர்கொள்கிறார். இயேசுவின் மகன் என்ற பெயரைக்கொண்ட பர்யேசுவோ ஒரு எலிமா - மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமானவன்; பிரபுக்கள், அதிபதிகளோடு, அதிகாரிகளோடு இருப்பவன். மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பவனாகவும் (Inspiring & Influencial personality) இருந்திருக்கலாம். ஆனால், இயேசுவின் பிள்ளைகளுக்கு, அதாவது அவரை விசுவாசித்து இரட்சிப்பை அடைய விரும்புவோருக்கு, எதிர்த்து நின்று அவர்களை விசுவாசத்தைவிட்டு திருப்ப வகைதேடுபவன். 

  எத்தனை எலிமாக்கள் இந்நாட்களில் சத்தியத்தை சரியாய்ப் பின்பற்ற விடாமல், குறிப்பாக வாலிபரை திசை திருப்புகின்றனர். நல்ல வேளை பவுலின் பெயரைக் கொண்ட செர்கியு பவுல் என்னும் அதிபதி இழுபட்டுப் போய்விடாமல் பவுல் என்று சொல்லப்பட்ட சவுலால் காப்பாற்றப்பட்டுவிட்டார். பின்னாட்களில்... 'உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்" என்றார் பவுல். (அப் 20 : 30).

  இன்றைய நாட்களில், பெற்றோர்களின் விசுவாச மற்றும் ஊழிய வாழ்க்கையில் விருப்பமற்று, அதைவிட்டுப் பிள்ளைகள் திருப்பப்பட்டுப் (draw away) விடுகிறார்கள். பெற்றோரின் இருதயங்களோடு பிள்ளைகளின் இருதயங்கள் ஒத்துப்போக முடியவில்லை. 

  பழைய ஏற்பாட்டின் கடைசி வசனத்தின் கடைசி பாகம் எலியா தீர்க்கதரிசி வந்து 'பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்." என்பதாய் முடிகிறது (மல்கியா4:6). எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் நம் ஆண்டவர் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த அவருக்கு முன்னே நடப்பான் என்று சொல்லப்பட்ட யோவான் ஸ்நானகனின் பிறப்பை காபிரியேல் தூதன் தூபபீடத்தண்டையில் சகரியாவுக்கு அறிவித்தார். எப்படி? 'அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும் கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புவான்." சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியது. (லூக் 1: 16,17) யோவான் ஸ்நானகன் ஒரு நல்ல உன்னதமானவருடைய தீர்க்கதரிசி. ஆனால், இயேசுவின் மகன் என்ற பெயரையுடைய கள்ளத்தீர்க்கதரிசி எலிமா என்பவனோ உள்ளுக்குள்ளே எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவன்! பிசாசின் மகன்! நீதிக்கெல்லாம் பகைஞன்! கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில்... திருப்பிவிடுவதில்... குழப்பிவிடுவதில் ... ஓயமாட்டான்!!  

பர்யேசு என்ற பெயரைப் பார்த்தால் ஒருவேளை இவரின் தந்தை பெயர் இயேசு என்பதாய் இருந்திருக்கலாம். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுவதாக வேறொரு நல்ல நபரைப் பற்றி பவுல் எழுதுகிறார். (கொலோ 4:11) பர்யேசு என்ற பெயருக்கும் வாழ்க்கைக்கும் எத்தனை பெரிய வித்தியாசம். பவுல் பிரசங்கியாத வேறொரு இயேசு பிரசங்கிக்கப்படுவதாகவும் வேறொரு ஆவி... வேறொரு சுவிசேஷம்... என்றும் பவுல் சொல்லுகிறாரே..! 

'வாலிபனே நீ யாருடைய மகன்?" என்று கோலியாத்தை வீழ்த்தி வெற்றிநடை நடந்து வந்த தாவீதைப் பார்த்து சவுல் கேட்டார். (1சாமு 17:58) 'நீ யாருடைய மகள்?" என்று ரெபேக்காளிடம் எலியேசர் கேட்டார். இருவருமே இப்பூமியில் தங்களைப் பெற்றுத்தந்த தகப்பன்மார்களைப் பற்றி சொன்னார்கள். உண்மையில் இருவருமே தேவனுடைய பிள்ளைகளாக வீட்டில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஆசீர்வாதமான பாத்திரங்களாக  பின்பற்றப்படக்;கூடியவர்களாக வாழ்ந்தனர். தாவீதோ இன்னும் ஆண்டவரின் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்ட நல்லதொரு மகன்! தம்பித் தங்கையே! உண்மையில் நீ யாருடைய பிள்ளை? யோசித்துப் பார்க்கலாமா? 

இந்த கடைசி காலங்களில் வஞ்சிக்கிறவர்களால் கிறிஸ்தவ உலகம் நிறைந்து காணப்படுகிறது. எனவே இழுக்கப்பட்டுப் போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இயேசு வாழ்ந்த நாட்களில் இருந்த வேதபாரகர்கள் பரிசேயர்களைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார், 'ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்" (மத் 23:15). ரொம்ப risk  எடுத்து பண்ணுறாங்க; ஆனால், எதற்கு நரகத்தின் மகனாக்கவா? மாபெரும் அப்போஸ்தலனாக அழைப்பு பெற்ற தன் சீஷன் யூதாஸ்காரியோத்து இழுக்கப்பட்டுப் போனதைக் குறித்து இயேசு ஜெபிக்கும் போது, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, 'கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல் அவர்களில் ஒருவரும் கெட்டுப்போகவில்லை" என்றார் (யோவான் 17:12). கேட்டின் மகன்; ஆனால், அழைக்கப்பட்ட அழைப்போ தேவடைய பிள்ளை! ஐயோ! கெட்டுப் போய்விட்டதே...!! 

நாம் கெட்டுப் போகாமல் இருக்க நம்மை இரட்சிக்க இயேசு நமக்காக செய்தவைகளை நாம் விசுவாசிக்கும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படாவிட்டாலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாக இருப்போம் என்பது நிச்சயம். (1யோவான் 3:1,2) 

'என்னை இழுத்துக் கொள்ளும் உமக்குப் பின்னே ஓடிவருவோம்!" வேறு யாரையும் பார்த்து ஓடமாட்டோம். 'நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்! உமது அன்பை நினைப்போம்! உத்தம வாலிபர்கள் உம்மை நேசிக்கிறார்கள்!" (உன்னத 1:4) எத்தனை அருமையான காட்சி. 

'பிள்ளைகளே! இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப் பட்டிருக்கிறது. பிள்ளைகளே! நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறீர்கள். வாலிபரே! நீங்கள் பலவான்களாயிருக்கிறீர்கள். வாலிபரே! நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள்."(1யோவா2:12-14) எத்தனையாய் வாலிபரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்! 

மனதும் மாமிசமும் விரும்பியவைகளைச் செய்யாமல் வீசி எறிந்து விட்டு தேவ ஆவியானவரின் ஆளுகைக்குள் அவரால் நடத்தப்பட்டு தேவனுடைய புத்திரராய் வாழ (ரோமர் 8:14) ஒப்புக்கொடுப்போம். என்றென்றும் இயேசுவின் மகனாக மகளாக வாழ்ந்து இயேசுவை உலகிற்கு காட்டிவிடலாமே! அவரின் மகிமைக்கு புகழ்ச்சியாக வாழ்வோமா...?


                                                                                          சகோதரி. ஜான்சி ஜெயராணி