August 2026

 

    கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். யாக்கோபு என்ற தேவ மனிதனுக்கு பன்னிரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். அவர்களில் அனைவரும் வாலிபர்களாக இருந்தபோதிலும், யோசேப்பு தனித்துவமான ஒருவனாகக் காணப்பட்டான். அவனுடைய பேச்சு, பார்வை, சிந்தனை மற்றும் செயல்களில் ஒரு வித்தியாசம் வெளிப்பட்டது. அவன் சகோதரர்களுடன் வாழ்ந்தாலும், அவர்களைப் போல வாழவில்லை. தேவனை அறிந்துகொள்ளவும், அவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் அவன் விரும்பினான். அதனால்தான் தேவன் அவன்மேல் பிரியம்கொண்டு, தமது திட்டங்களையும் சித்தத்தையும் நிறைவேற்றும் கருவியாக அவனைத் தேர்ந்தெடுத்தார். இளவயதிலேயே யோசேப்பு தேவனை அறிந்தவனாகவும்நடக்க விரும்பியவனாகவும் இருந்தான். தேவ சிந்தனை அவனுடைய இருதயத்தை நிரப்பியிருந்ததால், தேவன் தமது எதிர்கால நோக்கங்களை தரிசனங்களின் மூலம் அவனுக்கு வெளிப்படுத்தினார்.

     என்றபோதிலும், யோசேப்பின் வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. அவன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்புகளும் பகைகளும் எழுந்தன. அவனுடைய சொந்த சகோதரர்களே அவனை வெறுத்து, அவனை அழிக்க நினைத்து, இறுதியில் அடிமையாக விற்றுவிட்டனர். இருந்தபோதிலும், தேவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவனோடு இருந்தார். அதனால்தான் வேதாகமம், 'கர்த்தர் யோசேப்போடே இருந்தார்; அவன் காரியசித்தியுள்ளவனானான்" (ஆதி. 39:2) என்று சாட்சியளிக்கிறது. அடிமையாக விற்கப்பட்ட தேசத்திலேயே தேவன் அவனை ஆளுகை செய்யும் நிலைக்கு உயர்த்தினார்.  தேவன் யோசேப்போடு இருந்து அவனை உயர்த்தியதற்கான சில காரணங்களை நாம் காணலாம்.

 1. யோசேப்பு தேவனுடைய திட்டத்திற்குள் நடந்தான்             

 முதலாவதாக, தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்காக யோசேப்பை பயன்படுத்தினார். மனிதர்கள் அவனை அடிமையாக விற்றாலும், தேவனோ உயர்ந்த நோக்கத்திற்காக அவனை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். பிரியமான வாலிபரே! உங்களது வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சனைகள், ஒருவேளை தாங்க முடியாததாகவும் வேதனையானதாகவும் தோன்றலாம். ஆயினும், அவற்றின் மத்தியில்

தேவன் தமது உயர்ந்த நோக்கத்திற்காகம் திட்டத்திற்காகவும் உங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஆரம்பத்தில் யோசேப்பு இதனைஅறியாவிட்டாலும், பின்னர் தேவனுடைய திட்டத்தை தெளிவாக உணர்ந்தவனாக, தனது சகோதரர்களிடம், 'ஜீவரட்சனை செய்யும்படிக்கும், உங்களை உயிரோடே காப்பாற்றும்படிக்கும் தேவன் என்னை உங்களுக்குமுன்னே அனுப்பினார்" (ஆதி. 45:5-8) என்று கூறுகிறான்.

                மனிதர்கள் நமக்கு விரோதமாகச் செயல்பட்டாலும், தேவன் அந்தத் தீமையையே தமது திட்டத்தை நிறைவேற்றும் நன்மையாக மாற்றுவார் (ஆதி. 50:20). தேவன் தேவையில்லாமல் நம்மைச் சோதிப்பதில்லை; நம்மை புடமிடுவதன் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார் (சங். 105:17-19). எனவே, நமக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ பிரச்சனைகள் வந்தாலும், யோசேப்பைப் போல அதன் பின்னால் இருக்கும் தேவனுடைய திட்டத்தை அறிந்து அமைதியாய் காத்திருக்க வேண்டும்.

   2. யோசேப்பு உண்மையும் நேர்மையும் உடையவனாக இருந்தான்

                இரண்டாவதாக, போத்திபாரின் வீட்டில் யோசேப்பு அடிமையாக இருந்தபோதும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையோடும் விசுவாசத்தோடும் செய்தான். அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையும் ஆசீர்வாதமும் வெளிப்படையாகக் காணப்பட்டன. அதனால், போத்திபாரே, 'கர்த்தர் அவனோடே இருக்கிறார்" (ஆதி. 39:3-6) என்பதை உணர்ந்தான். பிரியமான வாலிபரே! நாம் எந்த இடத்தில் வேலை செய்தாலும், நமது உண்மையும் விசுவாசமும் தான் நம்முடைய அடையாளமாக இருக்க வேண்டும். சிறிய காரியங்களில் உண்மையாய் இருப்பவர்களை தேவன் பெரிய பொறுப்புகளுக்காக உயர்த்துகிறார் (லூக். 16:10). யோசேப்பு போத்திபாரின் வீட்டில் தன் பணிகளை உண்மையோடும் ஜாக்கிரதையோடும் செய்தபடியால், தேவன் அவனை ராஜாக்களுக்கு முன்பாக நிற்கும் நிலைக்கு உயர்த்தினார் (நீதி. 22:29).

3. யோசேப்பு சோதனையில் பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டான்

                மூன்றாவதாக, போத்திபாரின் மனைவி அவனைப் பாவத்தில் விழச் செய்ய முயன்றபோது, யோசேப்பு அதற்கு இடமளிக்கவில்லை. 'நான் தேவனுக்கு விரோதமாக இப்படிப்பட்ட பெரிய பாவத்தைச் செய்வது எப்படி?" (ஆதி. 39:9) என்று கூறி அந்தச் சோதனையை வென்றான். வாலிப வயதில் இப்படிப்பட்ட சோதனைகள் வருவது இயல்பானதே. எனினும், யோசேப்பைப் போல நாமும் தீமையை வெறுத்து, உத்தம இருதயத்தோடு நடக்கவேண்டும் (சங். 101:2-3). மனிதர்களின் கண்களுக்கு மறைவாகப் பாவம் செய்ய முடியும்; ஆனால், தேவனுடைய கண்களுக்கு எதுவும் மறைவல்ல என்பதை யோசேப்பு அறிந்திருந்தபடியினாலேயே, பாவம் அவனை நெருங்கியபோது அதற்கு இணங்காமல் விலகியோடினான் (2 தீமோ. 2:22).

  4. யோசேப்பு துன்பத்திலும் தேவனை விட்டுவிடவில்லை
                                சகோதரர்கள் அவனுக்குத் துரோகம் செய்தார்கள். அவன் அடிமையாக விற்கப்பட்டான். பாவத்திலிருந்து விலகியவன் பொய்யான குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தேவன் மீது யோசேப்பு கசப்பு கொள்ளவில்லை. 'ஏன்?" 'எதற்கு?" என்று தேவனை குற்றம் சாட்டவில்லை. சூழ்நிலைகளைப் பார்த்து வாழாமல், தேவனை நம்பி வாழ்ந்தான். அதனால் சிறைச்சாலையிலும் தேவனுடைய பிரசன்னம் அவனோடு இருந்தது (ஆதி. 39:20-23). தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்துவார் (ரோமர் 8:28) என்ற விசுவாசம் அவனுக்குள் இருந்தது. மேலும், சோதனையில் நிலைத்திருப்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையும் அவனைத் தாங்கியது (யாக். 1:12).

    5. யோசேப்பு தேவனுக்கு மகிமையைக் கொடுத்தான்

 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக உயர்ந்த இடத்தில் நின்றபோதும், யோசேப்பு தனது ஞானத்தையோ திறமையையோ பெருமைப்படுத்தவில்லை. பார்வோனின் கனவுக்கு விளக்கம் சொல்லும்போது, 'நான் அல்ல; தேவனே பார்வோனுக்கு சமாதானமான உத்தரவு அருளிச்செய்வார்" (ஆதி. 41:16) என்று கூறினான். தனது வாழ்க்கையின் வெற்றிக்கு தேவனுடைய கிருபையையே காரணமாகக் கருதினான். பிரியமான வாலிபரே! நமக்கும் தேவன் கொடுத்த வரங்கள், தாலந்துகள், திறமைகள், ஞானம், அறிவு ஆகியவற்றில் பெருமைப்படாமல், தாழ்மையுடன் நடக்கவேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையையும் உயர்வையும் அளிக்கிறார் (யாக். 4:6).

                பிரியமான வாலிபரே! இன்றும் தேவன் தமக்குப் பிரியமாய் நடக்கிறவர்களோடு இருக்கிறார். சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், அவரை நம்பி உண்மையாய் நடக்கிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. யோசேப்பை அடிமைத்தனத்திலிருந்து ஆளுகைக்கு உயர்த்திய தேவன், தம்மை நம்புகிறவர்களையும் தமது நேரத்தில் உயர்த்த வல்லவராக இருக்கிறார்.

                'தேவன் நம்மோடு இருப்பதற்கான மிகப்பெரிய தகுதி நமது திறமை அல்ல; நமது விசுவாசமும் கீழ்ப்படிதலுமே".

                                                                                                                    சகோ. சரவணன்