April 2026

 

அன்பான வாலிப நண்பர்களே! உங்கள் மேல் நினைவாய் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 

'நானோ சிறுமையும் எளிமையுமானவன்! கர்த்தரோ என்மேல் நினைவாய் இருக்கிறார்!!" என்றார் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவராய்க் காணப்பட்ட தாவீது. ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டிருந்தாலும், அவர் வேளை வரும் வரை எல்லோராலும் மறக்கப்பட்டவர். ஆம், இன்றைய வாலிபர்களின் நிலையும் அப்படித்தானே…! உங்களில் சிலர் அல்லது பலர் தழடிடநளளஇ டயல ழககஇ பேப்பர் போட்டுவிட்டேன்… என இன்னும் நிறைய சவால்கள் நிறைந்த பாதைகளின் வழியாய் போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால், கர்த்தர் உங்களை நினைத்தால் அது போதுமே!

வேதத்தில் 'சகரியா" என்ற பெயரில் கிட்டத்தட்ட 30 பேர் உண்டு. அந்த பெயரின் அர்த்தம் 'யெஹோவா நினைவுகூறுகிறார்"(Yahweh Remembers) என்பது. இஸ்ரவேல் மற்றும் யூதர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, யூதர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போகும் முன்பும், அப்புறம் ஆலயத்தைக் கட்ட சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பும், இதே பெயரில் வரும் இரண்டு வாலிபரை நாம் வேதத்திலே சந்திப்போமா?

யோய்தா என்ற மிகச் சிறந்த ஆசாரியனால் 7 ஆண்டுகள் பொத்தி பாதுகாத்து வைக்கப்பட்டு, 7 வயதிலேயே யூதாவின் எருசலேமிலே தாவீதின் சிங்காசனத்தில் ராஜாவானார் யோவாஸ். தகப்பனில்லாத அவருக்கு ஆசாரியனாகிய யோய்தா தான் எல்லாமே. யோய்தா உயிரோடிருந்த நாளெல்லாம் அவர் சொற்கேட்டு நடந்ததால், பெரிய சீர்திருத்தங்களையும், தேவாலயத்தைச் சுத்திகரிப்பதையும் சிறந்த முறையில் செய்தார். ஆனால், யோய்தாவின் காலம் முடிந்தபோதோ, பிரபுக்கள் மற்றும் மக்கள் சொல்வதைக் கேட்டு, கர்த்தரை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களை உள்ளே கொண்டுவந்து விட்டார்கள் (2நாளாகமம் 24:15-22). அங்கே தான் வெகுண்டு எழுகிறான் யோய்தாவின் குமாரனான வாலிபனாகிய சகரியா! யோவாஸ் ராஜாவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக உண்டு உறவாடி விளையாடியவன், ஆனால் இன்று எதிர்த்து நிற்கிறான். ஒரு தீர்க்கதரிசியாக உருவெடுத்து நிற்கிறான்… தேவனுடைய ஆவியினால் நிறைந்து, 'நீங்கள் கற்பனைகளை மீறுகிறது என்ன? கர்த்தர் உங்களைக் கைவிடுவார்" என்கிறான். ஜீவனையும் பணயம் வைத்து துணிச்சலாக. விளைவு, இரத்தசாட்சிகளின் பட்டியலில் இடம் பிடிக்கிறான். ஆலயப்பிரகாரத்திலே ராஜாவின் கட்டளைப்படி கல்லெறிந்து கொல்லப்படுகிறான். இவரைப் பற்றி வேறு காரியங்கள் எதுவும் தெரியாவிடினும், தேவனால் ஆசாரிய ஊழியத்திற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஆரோனின் பேரன் பினெகாஸ் போன்று வைராக்கியம் பிடித்த ஆசாரியப் பரம்பரை! என்பது தெளிவு. ஏபிரெயர் 12:4 ன் படி 'பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே!" வாலிப தம்பி தங்கையே! உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் படிக்கிற இடங்களிலும் அல்லது வேலையிடங்களிலும் கூட இதுபோன்ற எதிர்த்து தனித்;து நிற்கும் அனுபவம் உண்டா? அப்படியானால் கர்த்தர் உங்களை விசேஷமாய் நினைக்கிறார்.

சிறிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் கடைசிக்கு முந்தின புத்தகமாக வரும் சகரியா தீர்க்கதரிசி தான் இரண்டாம் நபர். வாலிபனான சகரியா ஒரு வல்லமையான தீர்க்கதரிசி" எப்படி..? பெரிய தீர்க்கதரிசி ஏசாயா தரிசித்த (ஏசாயா 6:5) சேனைகளின் கர்த்தராகிய இராஜாவை, கேரூபீன்கள், சேராபீன்களாகிய பரலோக தூதர் சேனைகளோடு பெரிய ஆர்மியை, சிறிய ஆனால் துடிப்பான வாலிபன் தரிசித்துவிட்டார் அல்லவா! ஆம்! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? தனியாக உட்கார்ந்து வேதத்தின் வெளிச்சத்திலே தேவனை தரிசிக்க முடிகிறதா? 'சேனைகளின் கர்த்தர்" என்னும் நாமம் (சகரியா புத்தகத்தில் 50க்கும் அதிகமான முறை) திரும்பத் திரும்ப வசனத்திற்கு வசனம் வருகிறதோடு 'சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்று மாபெரும் மிலிட்டரியின் கேப்டனுடைய கட்டளையாக வெளிப்படுகிறது! 

இவரின் முதல் தீர்க்கதரிசன வார்த்தையே, 'என்னிடத்தில் திரும்புங்கள்" அல்லது 'மனம்திரும்புங்கள்" என்று புதிய ஏற்பாட்டிலே யோவான் ஸ்நானகனும் நம் இரட்சகர் இயேசுவும் சொல்லி அழைத்த வார்த்தைகள் தான் வாலிபன் சகரியாவின் வாயிலிருந்தும் வெளிப்படுகின்றன. இன்றும் இப்படிப்பட்ட செய்திகள் மிகவும் அவசியமல்லவா? 

பாபிலோனிலே பிறந்து வளர்ந்து, அக்கினிக்கிரையான தேவாலயம் திரும்பக் கட்டப்பட செருபாபேல் மற்றும் பிரதான ஆசாரியனாகிய யோசுவா தலைமையில் இஸ்ரவேல் நாடு திரும்பிய இவரை, சேனைகளின் கர்த்தரின் வைராக்கியம் பற்றியெரியச் செய்தது. உலகமே எதிர்த்தாலும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று கர்த்தர் தமது ஜனத்திற்காக காட்டும் வைராக்கியம் எத்தனை மகா உக்கிரமாகத் தெரிகிறது (சகரியா 1:14; 8:1-3). வாலிப தம்பி தங்கையே! இன்றைய சபைகளைக் குறித்த பக்திவைராக்கியம் இயேசு சொன்னதைப் போல நம்மைப் பட்சிக்கிறதா? (யோவான் 2:17). தேவாலயம் கட்ட வந்தவர்கள் தம் சொந்த வீடுகளையும் சொந்த அலுவல்களையும் பார்த்து உல்லாசமாய் வாழ்ந்தபோது, திரும்ப எடுத்துக் கட்டுவதற்கு ஜனங்களை உற்சாகப்படுத்தி 'திடன்கொள்ளச் செய்தார்" இவர். (எஸ்ரா 5:1,2) தனியாக அல்ல, நல்ல மூத்த அனுபவமிக்க ஆகாய் தீர்க்கதரிசியோடு நின்றார். 

அற்பமாய் செருபாபேலால் அஸ்திபாரம் போட்டு ஆரம்பிக்கப்பட்ட வேலை ஸ்தம்பித்தபோது, 'நீர் தான் இதை செய்துமுடிக்கப்போகிறீர். உமக்கு முன்பாக பெரிய பர்வதமாயிருந்தாலும் எம்மாத்திரம்! ஆவியானவர் பெலன் தந்து கிருபை தந்து சேனைகளின் கர்த்தர் கூட இருந்து செய்து முடிப்பார். நீர் எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் சந்தோஷமாய் பார்க்கிறார்." (சகரியா 4:6-10) என்று தலைவர்களையும் உற்சாகப்படுத்தும் சகரியாக்கள் இன்று தேவை! 'come on! வாலிப நண்பா! உன்னில் நற்கிரியையை ஆரம்பித்தவர் அதை முடிவு வரை இயேசுவின் வருகையின் நாள் வரை முடிய நடத்துவார்." (பிலி 1:5) என்ற நம்பிக்கையை நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் சொல்லி கையைப் பிடித்துத் தூக்கிவிடுவது உங்களின் பொறுப்புதானே!

நம் ஆண்டவர் இயேசு இரட்சிக்கிறவராக முதல் வருகையில் இப்பூமியில் கழுதையின்மேல் பவணி வருவது (சகரி 9:9), அவர் 30 வெள்ளிக்கு காட்டிக் கொடுக்கப்படுவது (சகரி 11:12), அவரின் மரணம் - குத்தப்படுவது (சகரி 12:10; 13:1,7 மத் 26:31 யோவான் 19:37) இன்னும் பல மிகத் துல்லியமாக இவர் மூலம் முன்னறிவித்தவை அப்படியே நிறைவேறிவிட்டது. இப்போதிருக்கிற எருசலேமின் போர்ப் பதற்றங்கள் பற்றியும், கொடுமையாய் அழிக்கக்கூடிய அணு ஆயதங்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் (சகரி 12:2,3; 14:2,12), இயேசுவின் இரண்டாம் வருகையில் பரிசுத்தவான்களோடு கூட ஒலிவமலையில் வந்து இறங்குவது (சகரி 14:4,5) மற்றும் ஆயிரம் வருட அரசாட்சி (சகரி 14:9,16-21) பற்றியும் வெளிப்படுத்தப்பட்டவைகள் துல்லியமாக நிறைவேறக் காத்திருக்கின்றன. இயேசுவின் வருகையைப் பற்றி பேசுவோர் இப்போது மிகக்குறைவு. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். நீங்கள் ஒரு சகரியாவாக இருந்தால் சொல்லவேண்டியது உங்கள் கடமை! வருகையின் நாள் சமீபமே…ஓவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்… பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் ... நீதி செய்கிறவன் இன்னும் செய்யட்டும்... ஆனால், பரிசுத்தமில்லாதவன் (கானானியன்) அங்கே இருப்பதில்லை... ஆம்! 'சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பவைகள் தான் சகரியாவின் இறுதி வார்த்தைகள்!

மேஜர் தீர்க்கதரிசிகளாக வரும் ஏசாயா, எசேக்கியேல், தானியேல் போன்றவர்களோடு நின்று, இவரும் பரலோக தரிசனங்களை தூதர்களோடு பேசி கண்டதோடு, நாடுகளின் மேல் வரும் நியாயத்தீர்ப்புகளையும் அறிவிக்கிறார். 

இறுதியாக நம் ஆண்டவர் இயேசு மத்தேயு 23:35 ல் 'ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலை செய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் வரைக்கும்" என்று பழைய ஏற்பாட்டு இரத்தசாட்சிகளைப் பற்றி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது இந்த சகரியாவும் முதலில் கொல்லப்பட்ட அவரைப் போன்றே இரத்தசாட்சியானது எத்தனை பெரிய ஆச்சரியமான ஒற்றுமையைக் காட்டுகிறது. எந்த ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று செருபாபேலையும் மக்களையும் எழும்பிக் கட்டிமுடிக்க கைகளைத் திடப்படுத்தினாரோ அதே ஆலயத்தில் அவர் இரத்தசாட்சியாகிறார். ஒருவேளை அவர் கொல்லப்பட்ட காலம் இரண்டு ஏற்;பாடுகளுக்கும் இடைப்பட்ட கர்த்தர் பேசாதிருந்த 400 வருட இருண்ட காலத்தில் நடந்திருக்கலாம்; அதனால் வேதத்தில் எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், நம் ஆண்டவரோ அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்! நீங்கள் ஒரு உண்மையான சகரியாவானால் உங்களுக்குக்கூட இதே நிலை வரலாம்! பரவாயில்லை உங்களை கர்த்தர் கரத்தில் வரைந்தவராய் என்றென்றுமாய் நினைத்திருக்கிறாரே!! நடபடி புஸ்தகம் வாசிக்கப்பட்டு மொர்தெகாய் நினைவு கூறப்பட்டபோது ஒரே இரவிலே காரியங்கள் தலைகீழானதே! நீங்கள் கர்த்தருக்காக செய்யும் ஒவ்வொன்றும் ஞாபக புஸ்தகத்தில் எழுதப்படுவதை அறிவீர்களோ? கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். (சங்115:12)