கிறிஸ்துவுக்குள் அருமையான தம்பி, தங்கச்சி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளோடு இருக்கிறீர்களா? தேவனால் உயர்த்தப்படவேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறீர்களா? தேவன் உங்களை எந்த இடத்தில், எப்படியாக உயர்த்த விரும்புகிறாரோ, அந்த இடத்திற்கு உயர்த்தப்பட உங்களை ஆயத்தப்படுத்தும் முக்கியமான உண்மையை வேத வசனத்தின் மூலம் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமாக, உருவாக்கப்படும் காலமாகும். இப்பருவத்தில், நீங்கள் உங்களுக்காக ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள விரும்பலாம்; யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல், உங்களின் விருப்பப்படி வாழ வேண்டும் என்று நினைக்கலாம்;ஆனால், வேத வசனம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன? எது நமக்கு தகுதியானது? எது நமக்கு நல்லது? என்பதையே.
வேதாகமத்தின் அடிப்படை உண்மை : புலம்பல் 3 : 27 -ல் 'மனுஷன் தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமப்பது அவனுக்கு நல்லது" என்று வாசிக்கின்றோம். இந்த வசனம் முதலாவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், அதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது. தேவன் உங்களை எடுத்துச் செல்லும் பயணம் ஒருவேளை கடினமாகத் தோன்றலாம். அந்தக் கடினமானப் பாதையின் வழியாக உங்களை எடுத்துச் சென்று பழக்குவித்து, பலப்படுத்தி, தகுதிப்படுத்தி கைகளில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக உங்களை தேவன் மாற்றுவார்.
வாலிபனே, உன் வாழ்க்கையில் நீ சுமக்கின்ற நுகங்கள், உன் வாழ்க்கையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோர் அநேக நேரம் இதைச் செய்யாதே, நேரத்துக்கு வா, நன்றாகப் படி, ஞாயிற்றுக்கிழமை ஒழுங்காக ஆராதனைக்குப் போ, வேதம் வாசித்து ஜெபம் செய் என்று சொல்பவைகள் எல்லாம், உன் எதிர்காலத்தை உருவாக்குகின்ற நுகங்களே!
நுகத்தை ஏற்றுக்கொள்ளும் மூன்று வழிகள் :
1. பணிவு அல்லது அடங்கி இருத்தல் : 1 பேதுரு 5 : 5, 6 வசனங்களில் இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பேதுரு கூறுகிறார். மனத் தாழ்மையோடு, தங்களுக்கு மேலானவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கவேண்டும். இளைஞர்களாகிய உங்களின் எண்ணங்கள் அநேக நேரம், 'எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் செய்ய முடியும், யாருக்கும் நான் அடங்கி இருக்க விருப்பமில்லை" என்பதுதான்.
எஸ்தர் மனத் தாழ்மையோடு, பணிவோடு, தன்னை வளர்த்த மற்றும் தேவன் தெரிந்து கொண்ட ஜனங்களை நேசித்த மொர்தேகாய்க்கு அடங்கி இருந்தாள். தான் பட்டத்து ராணியாக வருவதற்கு தன்னை ஆயத்தம் பண்ணும்படி, தனக்கு மேலாக நியமிக்கப்பட்ட ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமே அல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை. தேவன் இவர்களை எனக்கு மேலாக நியமித்திருக்கிறார் என்ற எண்ணத்தினால் பொறுமையோடு, எந்த முறுமுறுப்பும் இல்லாமல் அடங்கியிருந்ததை நாம் பார்க்கிறோம் (எஸ்தர் 2:15,20). அதன் விளைவு என்ன? எஸ்தர் ராஜாத்தியாக உயர்த்தப்பட்டாள். அவள் மூலம், சொந்த ஜனங்களுக்கு மகிழ்ச்சியும், களிப்பும் உண்டாயிற்று; பகைஞனுடைய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
அருமையான தம்பி, தங்கச்சி, தேவன் உங்கள் மூலம் பெரிய திட்டங்களை நிறைவேற்றப் போகிறார். அதற்காக உங்களை பழக்குவிக்கிறார் என்பதை அறிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் பொறுமையாக அடங்கி இருங்கள். உங்களுக்கு மேலாய் வைக்கப்பட்டவர்களுக்கு கீழ்படியுங்கள். தேவன் ஏற்ற காலத்தில் உங்களை அநேகருக்கு ஆசிர்வாதமாக உயர்த்துவார்!
2. பொறுப்புணர்வு : மோசேயின் பணிவிடைக்காரனாகிய யோசுவா என்னும் வாலிபன், மோசேயின் காலத்திற்குப் பின்பு ஒரு பெரிய தலைவனாக உயர்த்தப்பட்டதைப் பார்க்கிறோம். மோசே தன் கைகளை யோசுவாவின் மேல் வைத்தபோது, அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான் (உபா. 34:9). மோசே செய்யவேண்டிய, தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கின்ற வேலையை யோசுவா செய்யும்படி, ஒரு பெரிய பொறுப்பை தேவன் அவன் கையில் கொடுத்தார் (யோசுவா 1 : 6).
இந்த யோசுவாவின் துவக்கம், மோசேயின் பணிவிடைக்காரனாகிய வாலிபனாக, மோசே கொடுத்த கட்டளைகளைப் பொறுப்புணர்வோடு செய்கிறவனாக ஆரம்பித்தது. யோசுவாவைப் பார்த்து அமலேக்கியரோடு யுத்தம் பண்ணு என்று மோசே சொன்னபோது, உடனடியாக கேள்வி கேட்காமல், சந்தேகிக்காமல் தனக்குக் கொடுத்த பொறுப்பை உடனே நிறைவேற்றினான் (யாத. 17:9.10). வேவு பார்க்க சென்றபோதும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் யோசுவா பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதை வேதத்தில் பார்க்கிறோம். தேவன் யோசுவாவை உயர்த்தினார்.
தாவீதும் கூட தன் வீட்டிலும், வேலையிலும், தன் கையில் கொடுக்கப்பட்ட ஆடுகளைக்குறித்த விஷயத்திலும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டார். இதனால் தாவீது தேவனால் அபிஷேகம் பெற்று, உயர்த்தப்பட்டார். நீங்களும் இந்த இளவயதில், பொறுப்புணர்வோடு இருந்தால், தேவன் உங்களை நம்பி, பெரிய பொறுப்புகளை உங்கள் கையில் கொடுப்பார்.
3. ஒழுக்கமுள்ள வாழ்க்கை : உன்னுடைய உயர்வுக்கு ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை மிகவும் அவசியமானது. ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடிக்காவிட்டால், தோல்வியான வாழ்க்கை வாழ நேரிடும். தானியலும் அவன் நண்பர்களும் அடிமைகளாக பாபிலோனுக்கு வந்தபோது, ராஜ போஜனத்தினால் தாங்கள் தீட்டுப்படக்கூடாது, தேவன் விரும்புகிற ஒழுக்கம், நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் கூட இருக்கவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தோடு வாழ்ந்தார்கள்.
தானியலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது, அதுதான் இடைவிடாத ஜெப வாழ்க்கை. தானியலுக்கு விரோதமாக யார் எதிராக வந்தாலும், சட்டங்கள் அவனுக்கு விரோதமாய் இயற்றப்பட்டாலும், சூழ்நிலை கடினமாக இருந்தாலும் தேவனைத் தேடுகிற ஒழுக்கமுள்ள வாழ்க்கையை இழக்கமாட்டேன் என்ற தீர்மானத்தோடு வாழ்ந்தான். அதனால் தான் தானியேலின் காரியம் எல்லா ராஜாக்களின் காலத்திலும், ஜெயமாகவே இருந்தது (தானியேல் 6:18). உயர்ந்த அதிகாரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, சாதாரண அன்றாட காரியங்களிலும் ஒழுக்கம் நிறைந்தவனாகக் காணப்பட்டான். நீங்களும் அந்த ஒழுக்கம் என்ற நுகத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய ஒழுக்கத்தை பழக்கமாக்குங்கள்; தேவன் உயர்ந்த ஸ்தானத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.
இயேசுவின் நுகம் : இரண்டு மாடுகள் அல்லது காளைகள் நுகங்கள் பூட்டப்பட்டு நிலங்களில் உழவுக்காக பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நன்றாய் பழக்கப்பட்ட மாட்டை, பழக்கப்படாத மாட்டுடன் நுகத்தில் இணைத்து, பழக்குவிப்பார்கள். இரண்டும் சேர்ந்து நுகத்தினால் இணைக்கப்படும்போது வேலை இலகுவாகி விடுகிறது. அவர்கள் ஒன்றாகச் செயல்படும்போது, தனித்தனியாகச் செய்வதை விட அதிகமாகச் செய்ய முடியும். ஓர் இணைப்பு என்பது ஒரு துணைக் கருவியாகும். மத்தேயு 11 : 27- 29 இல் இயேசு கிறிஸ்து, அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது அது மெதுவானதாக மற்றும் அவரது சுமை இலகுவானதாக இருக்கும் என்று கூறி நம்மை அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவோடு நாம் நுகத்தில் இணைக்கப்படும்போது நாம் தனியாக இல்லை, அவர் நம்மோடு கூட இருக்கிறார். எனவே, 'எனக்கு நியமிக்கப்பட்ட நுகத்தை, சுமையை நான் சுமப்பேன்; தேவனுடைய உதவியோடு, தேவனிடத்தில் கற்றுக்கொண்டு சுமப்பேன்" என்று இன்று ஒரு தீர்மானம் செய்வோம்! அருமையான தம்பி, தங்கச்சி, 'மனுஷனுக்கு நல்லது" என்று சொன்ன நுகத்தை இளவயதில் சுமக்கும் போது, தேவன் உங்களை ஏற்ற காலத்தில் அவருடைய திட்டத்தின் படி உயர்த்துவார். ஆமென்!